பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள்

291

வளர்ச்சி, மனவளர்ச்சி, புலப்பயிற்சி, கற்பனையாற்றல் போன்ற பண்புகளை வளர்க்கின்றது. இவை யாவும் கற்றலுக்குத் துன்ை செய்யும் கூறுகளன்றோ?

பயிற்சி மாற்றம்

கல்வித்துறையில் கொள்கை முறையிலும் செயல் முறையிலும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று பயிற்சி மாற்றம்[1] என்பது. ஒரு பாடத்தில் அல்லது செயலில் கொடுக்கப்பெறும் பயிற்சி பிறபாடங்களிலும் செயல்களிலும் பயன்படுகின்றதா? எந்த அளவுக்குப் பயன்படுகின்றது? அஃது எந்த நிபந்தனை களுக்குட்பட்டது? ஒன்றைக் கற்பது இன்னொன்றைக் கற்பதன் மேல் ஆதிக்கமுள்ளதா?’ என்னும் வினா இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினையாகும்.

ஒரு மொழியிலுள்ள சொற்களையும் வரலாறுபற்றிய செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கணித வாய்பாடுகளையும் மனப்பாடம் செய்தல் நினைவாற்றலுக்குப் பயிற்சி தந்து ஏனைய செய்திகளைத் திறம்பட நினைவிற்குக் கொண்டுவரத் துணை செய்யும் என்று நம்பினர். இன்றும் சிலர் நம்புகின்றனர். அங்ஙனமே, வேறு சிலர் அறிவியல் முறைகளில் பயிற்றல் உற்றுநோக்கும் ஆற்றலைப் பயிற்றுவித்து சமூகத் தொடர்பு களையும் தனிப்பட்டவரின் தொடர்புகளையுங்கூட ஊன்றிக் கவனிக்கச் செய்யும் என வாதிப்பர். ஒரு திறனில் கொடுக்கப் பெறும் பயிற்சி வேறு திறனுக்குப் பெயர்ச்சி அடைகின்றது. என்பது இதன் உட்பொருள். இதுதான் பயிற்சி மாற்றம் அல்லது முறைமைக் கட்டுப்பாடு[2] என்று வழங்கப் பெறுகின்றது. பழைய உளவியலார் உள்ளம் என்பது நினைவு, கற்பனை, உற்றுநோக்கல், சிந்தனை, ஆய்தல் போன்ற ஒன்றற்கொன்று தொடர்யில்லாத தனித்தனிப் பெற்றிகளாலான[3] சிற்றறை களைக் கொண்டது என்றும், தக்க பயிற்சிகளால் அவற்றை வலுப்படுத்தி எந்தச் செயலுக்கும் பயன்படுத்தக்கூடும் என்றும் கருதினர். இக்கருத்து பெற்றி உளவியலின்[4]பாற் பட்டது. இலத்தின் மொழி, கணிதம், அளவை நூல்'[5] போன்றவை பிற பாடங்களைவிட உயர்ந்த பயிற்சி மதிப்புடையவை எனக் கருதப்பெற்றன. இப்பாடங்களில் தேர்ச்சி அதிகமாகக்


  1. பயிற்சி மாற்றம்-Transfer of training.
  2. முறைமைக் கட்டுப்பாடு-Formal discipline.
  3. பெற்றி-Faculty.
  4. உளவியல்--Faculty psychology.
  5. அளவை நூல்-Logic.