பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும்

297


வாழும் வயது முதிர்ந்த பெரியார் ஒருவர் ஒரு சிறுவனை நோக்கி, 'ஒரு மரத்தில் 100 காகங்கள் இருந்தன. வேடன் ஒருவன் ஒரு காக்கையைச் சுட்டுவிட்டான். மீதி அம்மரத்தில் எத்தனை இருக்கும்?' என்ற வினாவை விடுப்பதை நாம் அறிவோம். இங்கனமே விடுகதைகள், புதிர்கள், குறுக்கு எழுத்துப்போட்டிகள் போன்ற சாதனங்கள் அறிதிறனை ஓரளவு சோதிக்கப் பயன்படுகின்றன. எனினும், இவை யாவும் அறிவியல் முறையில் தேர்ந்தெடுக்கப் பெறவில்லை; ஒருநிலையாக்கப்பெறவு மில்லை.

இவ்வாறு நமக்குத் தோன்றியவாறு மதிப்பிடுவதைவிடப் பள்ளிகளில் பாடத்திறனை ஆசிரியர்கள் வினாக்கள் மூலம் சோதித்து மதிப்பெண்கள்[1] வழங்கி மதிப்பிடுவது போன்ற முறையினை மேற்கொள்ளுவது ஓரளவு மேலானது. இவ்வாறு அளந்து அறியும் முறையினை மிகத் துல்லியமானதாகச் செய்கின்றது உளவியற் சோதனை முறை. இம்முறைப்படி மக்களின் அறிதிறனை அளப்பதற்கும் பலவித சோதனைகள் வகுக்கப்பெற்றுள்ளன.

அறிதிறன் என்பது அளந்து பார்க்கக் கூடிய இயற்பியல் பொருளன்றே, அதை எப்படி அளப்பது என்ற ஐயம் நம்மிடையே எழுதல் இயல்பே. அங்ஙனமாயின் வெப்பமும் மின்னாற்றலும் இயற்பியல் பொருள்களல்லவே. அப்படியிருந்தும் இயற்பியலறிஞர்கள் அவற்றைத் துல்லியமாக அளக்கின்றனரன்றோ? வெப்பத்தையும் மின்னாற்றலையும் அவற்றாலேற்படும் விளைவுகளைக் கொண்டு அளப்பதைப் போலவே, அறிதிறனையும் அதன் விளைவுகளைக்கொண்டு அளந்தறியலாமன்றோ? இயற்பியலறிஞரின் அளவுகள் எங்ங்னம் நம்பத்தக்கனவோ, அங்ஙனமே உளவியலாரின் அளவுகளும் நம்பத்தக்கவையே. இருவரும் காரியத்தை வைத்துக் காரணத்தை அளக்கும் தத்துவத்தை மேற்கொள்ளுகின்றனர்; அவ்வளவுதான்.

பினே[2]யின் சோதனைகள்: 1904-ஆம் யாண்டில் ஃபிரெஞ்சு நாட்டுக் கல்வியமைச்சர் பொதுப்பள்ளிகளில் குறை மதியினருக்குக் கற்பிக்கும் முறையை ஆராய்வதற்காக மருத்துவர்கள், கல்வியறிஞர்கள், அறிவியலறிஞர்கள், பொது அலுவலர் கள் போன்றவர்களின் மாநாடு ஒன்றனைக் கூட்டினார். அவர்களுள் பெரும்பாலோர் பயனற்ற பேச்சில் காலங்கடத்தின ரெனினும், பினே என்ற இளம் உளவியலறிஞரும் சைமன்[3]


  1. மதிப்பெண்கள்-Marks.
  2. பினே-Binet.
  3. சைமன்-Simon