பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

கல்வி உளவியல் கோட்பாடுகள்


என்ற மருத்துவப் பெரியாரும் இதனைப்பற்றிச் சிறப்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்; ஓர் அளவுகோலையும் கண்டறிந்தனர். அதன் பின்னரே 'அறிவளமை' என்பதும், 'அறிவினை அளந்து காண்பது' என்பதும் உலகெங்கும் வழங்கத் தொடங்கின.

பினே-சைமன் சோதனைகள்: பினேயின் சோதனைகள் முதன்முதலாக 1905-இல் வெளியிடப்பெற்றன. அவை மிகுந்த பயனுடையனவாக இருந்தமையால் அவற்றைப் பலநாட்டு உளவியலார்களும் கல்வியியலார்களும் தத்தம் நாட்டு நிலைமைக்குத் தக்கவாறு மிக ஆர்வத்துடன் மேற்கொள்ளலாயினர். அதன் பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிடைத்த அநுபவங்களின் பயனாக அவ்வாய்வுகள் பல திருத்தங்களைப் பெற்று எங்கணும் பெருவழக்காயின. பினேயும் சைமனும் இணைந்தியற்றியதால் அவ்வாய்வுகள் 'பினே-சைமன் சோதனைகள்' என வழங்கப்பெறுகின்றன.

படிப்படியாகச் சிக்கலாகிக்கொண்டு வரும் சோதனைகளை முதலில் பினே அமைத்துக்கொண்டார். மூன்றாண்டுக் குழவிகள் இவற்றில் எத்தனை வினாக்களுக்கு விடையிறுக்கும் என அறிவதற்குப் பல்லாயிரம் குழவிகளை ஆராய்ந்தார். அந்த மூன்றாண்டுக் குழவிகளில் நூற்றுக்கு எழுபது குழவிகள் எந்த வினாக்களுக்கெல்லாம் விடையிறுத்தனவோ அந்த வினாக்களை மூன்றாண்டுக் குழவியை அளந்து அறிந்து சுட்டும் வினாக்கள் எனக் குறித்துக்கொண்டார். இவ்வாறே ஒவ்வொரு யாண்டிற்குமாக அந்தந்த யாண்டிற்கு ஏற்ற பொது அறிவு நிலையை (Norms) உணர்த்தும் சோதனைகளை ஆராய்ந்து குறித்துக்கொண்டார்.

[எ-டு] மூன்றாம் யாண்டு : 1. குழவி கண், வாய், மூக்கு இவற்றைக் காட்டுதல். 2. நாம் கூறும் சிறு சொற்றொடரைத் திரும்பச் சொல்லுதல். 3. பத்தில் குறைந்த எவையேனும் இரண்டு எண்களை நாம் கூறியபின் திரும்பச் சொல்லுதல். 4. படத்தில் கண்ட பொருள்களை இன்னவெனக் கூறுதல். 5. தன் குடிப்பெயரை அறிதல்.

நான்காம் யாண்டு : 1. தான் ஆணா, பெண்ணா என அறிதல். 2. பழக்கமான பெயர்களை அறிதல். 3. பத்தில் குறைந்த எண்களைத் திரும்பச் சொல்லுதல். 4. இரண்டு கோடுகளில் பெரியது எது என அறிதல்.

மூன்று முதல் பதின்மூன்று வயதுவரை உள்ள குழந்தைகளின் அறிவு நிலைகளை அளக்கும் சோதனைகளைப் பினே