பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/325

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இவ்வன்மை அதிகமாகின்றது. இவ்விரண்டுள் பொதுச்சூழ்நிலையின் பங்கு குறைந்ததாகவே காணப்பெறுகின்றது.

அறிதிறனின் தனிக்கூறுகள்

குடிவழி, சூழ்நிலை ஆகிய இரண்டைத் தவிர அறிதிறன் வளர்ச்சியைப் பாதிக்கும் வேறு கூறுகளும் உள என்பதை உளவியலார் நன்கு அறிவர்; அறிதிறன் வளர்ச்சிக்கு வேறு பல சிறப்புக் கூறுகளும் துணையாகவுள்ளன. மேலும், அறிதிறனோடு தொடர்பற்ற பல கூறுகளையும் மக்கள் அதனுடன் தொடர்புடையவை எனக் கருதுகின்றனர். அறிதிறனும் பிறப்பு வளர்ச்சியும் : முதற்பிள்ளைகள் தமக்கு அடுத்துப் பிறக்கும் தம்பி, தங்கையரைவிடச் சற்று அறிதிறன் குறைந்தவர் என்று ஸ்டெக்கெல்23 என்ற உளவியலறிஞர் கண்டார். அவர் 5928 சகோதர இணைகளை ஆராய்ந்து இம்முடிவிற்கு வந்தார். ஆயினும், இவ்வேறுபாட்டிற்கு உயிரியல் அடிப்படையில் வேறுபாடு காண முடியாதாதலின் இது சூழ்நிலையின் வன்மையினாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும். இளைய பிள்ளைகட்கு மூத்தோரின் தூண்டலும் போட்டியும் உள்ளன; முற்பிறந்தோருக்கு இவை இல்லை. எனினும், இந்நிலையால் அறிதிறன் வேறுபாடு சிறிதளவே உள்ளது.

பிறந்த மாதமும் அறிதிறனும் : நாம் பிறந்த நாளும் கோளும் தம் விதியைப் பாதிக்கின்றன என்று சோதிடர் கூறுவர். செப்டம்பர் மாதம் பிறந்தவர் மதிநுட்பமாயிருப்பர் என்றும், வெள்ளிக்கோளின் கீழ்ப் பிறந்தவர் வாழ்க்கையில் இன்பமும் மலர்ச்சியும் உடையராயிருப்பர் என்றும், சனியின் கீழ்ப்பிறந்தவர் மாறுபாடு, அழுக்காறு, தருக்கம் நிறைந்தவராயிருப்பர் என்றும் கூறுவர். பிறந்த திங்களுக்கும் அறிதிறனுக்கும் உள்ள தொடர்பை ஆராயப் பலர் முனைந்தனர். பிறந்த திங்களாலும், நாளாலும், கோளாலும் அறிதிறன் பாதிக்கப் பெறுகின்றது எனபதற்கு யாதொரு சான்றும் கிடைக்கவில்லை.

மனித இனமும் அறிதிறனும் : மனித இனத்துள் ஓரினம்24 பிறிதோரினத்திலும் உயர்ந்தது என்னும் கொள்கை அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் தனியாட்சி நாடுகளிலும் அதிகமாக விவாதிக்கப் பெறுகின்றது. இஃது உண்மையாயின் ஓரினத்தின் ஜீன்கள்25 சிறந்தவை என்றாகின்றது. அறிவியல் அடிப்படையில் இவ்வுண்மை இன்னும் மெய்பிக்கப்பெறவில்லை. பெரும்பாலும்


23. ஸ்டெக்கெல்-Steckerl, M.A.

24. இனம்-Race.

25. ஜீன்-Gene.