பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அவரவருக்கு ஏற்ற கல்வியை அளித்து ஏற்ற தொழிலையும் திட்டமாகத் தீர்மானிக்கின்றனர். மாணாக்கர்கள் தமக்குத் தகுதியற்ற கல்வியை மேற்கொண்டு உழலுவதினின்றும், தகுதியற்ற தொழிலில் ஈடுபட்டு அல்லலுறுவதினின்றும் காக்கப்பெறுகின்றனர். அங்கெல்லாம் இயற்கைத் திறனுக்கும், பயிற்றலுக்கும். தொழிலுக்கும் சரியான பொருத்தப்பாடு அமைகின்றது. இதை ஆசிரியர் நன்கு அறிந்தால், ஒரு வகுப்பிலுள்ள மாணாக்கர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நினைத்து அளிக்கப்பெறும் வகுப்புப் போதனை பெரும்பாலும் பயனற்றது என்பது புலனாகும்.

புள்ளிக் கணிதம்

தனியாள் வேற்றுமைகளை ஆராயுங்கால் உளவியலார் அளவறி அளவீடுகளைக்[1] கையாளுகின்றனர். சோதனைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பெறுகின்றன; ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள அலகுகளில்[2] தேர்ச்சியடைவதிலிருந்து கற்றல் தீர்மானிக்கப்பெறுகின்றது; ஒரு புதிருக்கு விடை காண்பதற்கு ஏற்படும் கால அளவிலிருந்து புதிருக்குத் தீர்வு காணும் திறன் அறுதியிடப் பெறுகின்றது. ஒரு வகுப்பிலுள்ள பல்வேறு தனியாள்களிடமிருந்து பல்வேறு திறன்களைப்பற்றிச் சோதனைகளால் பெறும் மதிப்பெண்கள் போன்ற புள்ளிவிவரங்களின் வீச்சு[3] மிக விரிந்த அளவில் இருக்கும். அஃதாவது இங்கனம் தனிமையாகக் கிடக்கும் எண்ணற்ற மாறுபட்ட தகவல்களை ஒன்று சேர்த்துப் புரிந்து கொள்வது மானிட உள்ளத்திற்கு இயலாது. ஆகவே, இவ் விவரங்களைப் புள்ளியியல் முறைப்படி ஒழுங்குபடுத்தித் தொகுத்துப் பார்த்து அத்துறையிலுள்ள பல்வேறு துறை நுட்ப முறைகளை மேற்கொண்டு அம்முடிவுகளுக்குப் பொருள் காண வேண்டும், புள்ளியியல் முறைகள் மிகச் சிக்கலான விவரங்களை எளிதாக்கிச் சீக்கிரம் ஒப்பிடத் துணை செய்கின்றன. குறைந்த விவரங்களைக் கொண்டு மனப் பண்புகளை மதிப்பிடுவது அரிதாதலின், ஓர் அளவு வரிசையை ஆராய்ந்து பொது நிலைமையை அறியலாம்.

அன்றாட வாழ்க்கையில் புள்ளியியல் முறைப்படி கணக்கிட்ட கருத்துகள் பலவற்றை நாம் உணராமலேயே


  1. அளவீடுகள்-Quantitative measurements
  2. அலகு-Unit
  3. வீச்சு-Range