பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/368

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

349


வளரும் சிறு குழந்தைகளின் நரம்புத் தினவுக் கேற்றவாறு இயக்க வேலைகள் இன்றியமையாதவை. ஆதாரக் கல்வி ஓரளவு இதனை நிறைவேற்றுகின்றது என்று சொல்லப்பெறுகின்றது.

தனித்த பொருத்தப்பாட்டுப் பிரச்சினைகள் வாய்ந்த குழந்தைகள்

சூழ்நிலையுடன் சரியான முறையில் பொருத்தப்பாடடைய முடியாத குழந்தைகளும் உள்ளனர். அவர்களுள் சில முக்கிய வகைகளை ஈண்டு ஆராய்வோம்.

உடற்குறையுடையவர்கள்: இத்தகைய குழவிகள் அதிகமாக இடர்ப்பாடுகளுக் குள்ளாகின்றனர். பிற குழவிகளைப்போல் விளையாட்டுச் செயல்களிலும், வேறு சமூகச் செயல்களிலும் சரியான முறையில் இவர்களால் பங்குபெற முடிகின்றதில்லை. பாடவேலையிலும் இவர்கள் மெதுவாகவே உள்ளனர். இவர்கள் ஆசிரியர்களாலும் உடன் பயில்வோராலும் பாராட்டப் பெறுவ தில்லை. மேலும், எதிர்காலத்தில் மனநிறைவு தரக்கூடியதொரு தொழிலை இவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். தன்னம்பிக்கை இவர்களிடம் நல்லமுறையில் வளரவாய்ப்புகள் இல்லை. இவர்களது உடற்குறைபாடுகளின் காரணமாகப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்கட்கு அதிகமான பாதுகாப்பையும் அளிப்பர். இதன் பயனாக இவ்வகைக் குழவிகளிடம் தன்னுணர்ச்சி, மிக்குணர்ச்சி, அச்சம், தாழ்வுணர்ச்சி போன்றவை காணப்பெறுகின்றன. இவர்கள் கடினமான நிலைமைகளை எதிர்த்துச் சமாளிக்க முற்படாமலும், பிறருடன் கலந்து கொள்ளாமலும் ஒதுங்கிப் பின்வாங்குவர். ஆனால், இவர்களுடன் சற்று முன்யோசனையுடனும் விவேகத்துடனும் நடந்து கொண்டால் இவர்களை நன்முறையில் வளர்க்கலாம். இவர்களுடைய இயற்கைக் குறைகளைக் கூடியவரை வெளிப்படை யாகக் கவனிக்காமல், அவர்களிடம் அமைந்து கிடக்கும் வேறு ஆற்றல்களைப் பாராட்டும்படியான முறைகளை அமைத்தால் அவர்களிடம் உற்சாகம் தோன்றி அவர்கள் ஒரளவு பொருத்தப் பாடு அடைவதற்குரிய வாய்ப்புகளைப் பெறுவர்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்: அடிக்கடி பல்வேறு நோய் வாய்ப்படும் குழந்தைகளும் மேற்குறிப்பிட்டவகைக் குழவிகளைப் போலவே பள்ளி வேளைகளிலும் விளையாட்டுகளிலும் பிற்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் எளிதில் களைப்பு அடைகின்றனர். இதனால் பிறர் இவர்களைச் சோம்பர்கள் எனக் கருதவும் இடம் ஏற்படும். நோய்களின்