பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/369

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

கல்வி உளவியல் கோட்பாடுகள்


காரணமாகவும், வீட்டில் அவர்கட்குப் பெற்றோர்களும் பிறரும் அதிகமாக இடம் கொடுப்பதாலும் அவர்கள் எளிதில் சினங் கொள்ளக் கூடியவர்களாக இருப்பர். கடுமையான நோயின் காரணமாக பள்ளிக்கு நீண்டநாள் வரமுடியாதபொழுதெல்லாம். தாம் இழந்த பாடங்களைப்பற்றி அதிகமாகக் கவலைப்படுவர். நோய்வாய்ப் பட்டவர்களிடம் நோய் நீங்கின பிறகும் சில பிரச்சினைகள் எழுகின்றன. குழந்தைகள் குணமடைந்து விட்டனர் என்று பெற்றோரை நம்பவைத்தல் கடினம், நோய் நீங்கின பிறகும் இவர்கள் விளையாட்டுகளிலும் பிற சமூகச் செயல்களிலும் ஈடுபடாமல் விலகியிருப்பர். இவர்களை ஆசிரியர்கள் தக்க முறையில் கவனித்து ஏற்ற வேலைகளில் ஈடுபடுத்திப் பொருத்தப்பாடடையச் செய்தல் வேண்டும்.

புலக்குறைபாடுடையவர்கள்: சாதாரணமாக நாம் சில குழவி களிடம் பார்வைக் குறைகளும் கேள்விக் குறைகளும் இருப்பதைக் காண்கின்றோம். பார்வைக் குறைபாடுகளுள் பெரும்பான்மையாகக் காணப்படுபவை தூரப்பார்வை, கிட்டப் பார்வை என்பவை. இவை இரண்டினுள் ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது துார்ப்பார்வையே. காரணம், பாட வேலைகளிலும் விளையாட்டுகளிலும் பிற்போக்குடைமையால் ஏற்படும் தாழ்வுணர்ச்சியைத் தவிர, இவர்கள் தலைவலி யினாலும் ஒருவித வெறுப்புணர்ச்சியாலும் அதிகமாகத் துன்புறுகின்றனர். இதனால் பள்ளிவேலைகளில் இவர்கள் தக்க முறையில் பொருத்தப்பாடடைய முடியாமல் போகின்றது.

குழவிகளிடம் சில சமயம் பிறருக்கு எளிதில் புலனாகாத செவிமந்தம் ஏற்பட்டிருக்கும். இவர்களும் படிப்பிலும், விளையாட்டிலும், பிற செயல்களிலும் பின் தங்குகின்றனர். இவர்கள் கவனக் குறைவும், மந்தமதியும் உள்ளவர்கள்போல் பிறர் கண்ணுக்குத் தோற்றமளிப்பர். மந்தச் செவியினர் பொதுவாக நாணப்படுபவர்களாகவும், ஒதுங்கும் பண்புடையவர்களாகவும் காணப்பெறுவர்.

இந்த இரண்டு வகைக் குறைபாடுடையவர்கள் பல துறைகளிலும் பிற்போக்கு நிலையில் இருப்பதன் காரணமாக, இவர்களிடம் தாழ்வு மனப்பான்மை காணப்பெறும். இவர்கள், தாம் பள்ளியைவிட்டு வெளியேறினால் நலம் பயக்கும் என்றும் கருதுவர். இவர்கள், உடன் பயிர்வோர்களால் கவனமற்றவர் களாகவும், அசடுகளாகவும் கருதப்பெறுவர். இக்குறையுள்ளவர்களிடம் ஆசிரியர் தனிக் கவனம் செலுத்தி அவர்களிடமுள்ள குறைகளைச் சமாளிக்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். உடற்குறை பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமாயின்,