பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/370

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

351

ஆசிரியர், பெற்றோர், மருத்துவர் ஆகிய மூவருடைய ஒத்துழைப்பும் வேண்டும்.

மீத்திறம் பெற்ற குழவிகள்: மீத்திறம் பெற்ற[1] குழவிகளும் ஆசிரியர்கட்குப் பல பிரச்சினைகளைத் தருபவர்கள். இவர்களும் எளிதில் பொருத்தப்பாடடைவதில்லை. ஆசிரியர்கள் இக்குழந்தைகளின் திறனையும் உயர்வையும் மதியாததால், இவர்கள் பள்ளியிடமும் ஆசிரியர்களிடமும் எதிர்ப்பு மனப்பான்மையைக் கொள்ளுகின்றனர். பெற்றோர்கள் இக்குழவிகளின் உயர்வைக் கருதாமையால், இவர்கள் தூண்டல்கள் குறைவுற்று மனந்தளர்கின்றனர். அறிதிறன் மிக்கிருப்பதால் உடன்பயில்வோரிடமும் பொருத்தப்பாடடைவதில் இடர்ப்பாடு உண்டாகின்றது. வகுப்பு வேலைகளில் இவர்களுடைய ஆற்றலுக் கேற்ற தூண்டல்களின்மையால், ஊக்கங்குறைந்து மட்டமான வேலைப்பழக்கங்களும் இவர்களிடம் உண்டாகின்றன. தகுந்த வழி காட்டப்பெறாமையால் இவர்களிடம் குறுகலானவையும், கோணலானவையும் விரும்பத்தகாதவையுமான கவர்ச்சிகள் ஏற்படுகின்றன. சமூகம் இவர்களுடைய கவர்ச்சிகளையும் செயல்களையும் பாராட்டாமையால், இவர்களிடம் சில சமயம் தாழ்வுணர்ச்சி தோன்றி வளர்கின்றது. சில சமயம் வீண் செருக்கும் ஏற்படுகின்றது. முதியோரின் மிகைப் பாராட்டினால் செருக்கும் பீடும் வாய்ந்த ஆளுமை இவர்களிடம் வளர்கின்றது. இயல்பான சமூகச் செயல்களின்மையால், ஆளுமையின் ஒரு சார்பான வளர்ச்சி ஏற்படுகின்றது.

இவர்கட்குத் தனிப்பள்ளிகளும் தனி வகுப்புகளும் அமைத்தல் நன்று; நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை. இவர்களது அறிவுநிலைக் கேற்ற அதிக வேலை, உயர்ந்த வேலை, இவை இரண்டும் கலந்த வேலை கொடுக்கலாம். சமய சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு தானாகச் செய்யக்கூடிய வேலை களையும் தரலாம். இவர்களுக்கெனத் தனிப் பாடத்திட்டம் வகுத்து, கற்பித்தால் நற்பயன் விளையும்; நடை முறையில் இதுவும் சாத்தியப்படுவதில்லை. இவர்கள் செய்த வேலையை அவ்வப்பொழுது தனித்த முறையில் தணிக்கை செய்து உற்சாகப் படுத்தினால் நன்முறையில் பொருத்தப்பாடு அடைவர்.

மந்தக் குழவிகள்[2]: இவர்களது அறிதிறன் ஈவின் தாழ் வெல்லை 75; உயர்வெல்லை 90. இவர்கள் பள்ளிகளில் அடையும் இடர்ப்பாடுகள் இவ்வளவு அவ்வளவு அன்று.


  1. 12. மீத்திறம் பெற்ற-Gifted.
  2. 13. மந்தக் குழவிகள்-Dull children.