பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

கல்வி உளவியல் கோட்பாடுகள்


வளர்ச்சி தடைபட்டு நெறிபிறழ்வு தோன்றும். இதனுடன் அறிவுக்குறையும் சேர்ந்து குழந்தையைத் தன் தவறான செயல்களால் நேரிடும் விளைவுகளைப்பற்றிச் சிந்திக்காமல் செய்து வருகின்றது. இவை ஆளுமை பற்றியவை. சூழ்நிலைபற்றியவைகளில் பெற்றோர் சச்சரவு, மணமுறிவின் காரணமாகவோ, சிறை சென்றதாலோ அல்லது ஒருவரை யொருவர் கைவிட்டதாலோ ஒருவரை யொருவர் பிரிந்து வாழ்தல், குடி, ஒழுக்கத் தவறு, வறுமை, வேலையில்லாதிருத்தல், மாற்றாந்தாய் அல்லது மாற்றாந்தந்தையின் கொடுமை, விரும்பாமல் ஈன்று புறக்கணித்தல் போன்ற வீட்டு நிலைமைகளும், பள்ளிகளில் கற்றவையும், அக்கம் பக்கத்து நிலைமைகளும் பயிலும் விளையாட்டுகளும், சேர்ந்த தோழமையும் அடங்கும்.

இக் குழவிகளின் பண்புகள்: நெறி பிறழ்ந்த குழவிகளின் புறநிலைச் செயல்களுக்கும், அவை வாழ்ந்துவந்த நிலைக்கும், அவற்றின் மன நிலைக்கும் ஒற்றுமை உண்டு என்று கூறிவிடலாம். ஒருவன் சமூகத்தில் சரியான இடம்பெற வேண்டுமாயின் உண்மையென்னும் கூறினைக் கருத வேண்டும் என்பதை இவர்கள் மதிப்பதில்லை. இவர்கள் உலகத்தோடு ஒட்ட ஒழுகலின் சிறப்பினை அறியாததால், அடிக்கடி இடர்களுக்குட்படுகின்றனர். தான் என்ற எண்ணமும் மேம்பாட்டு மன நிலையும் வளர, அறிவு நிலை சிறந்து விளங்கவேண்டும். இவர்களது கீழான அறிவுநிலை அவ்வாறு உணர்வதனைத் தடுக்கின்றது. இதனால் இத்தகைய குழவிகளைச் சீர்திருத்துவது அருமையிலும் அருமையாகும். இவர்களிடையே சமுதாய உணர்ச்சியும், மெய்ப்பாடுகளும், மன நிலைகளும் சமமாக விளங்காது அமைதியின்றிக் கொந்தளித்து வரவும் காண்கின்றோம். சமுதாய உணர்ச்சி மழுங்கித் தேயவும் காண்கின்றோம். ஒரே குடும்பத்தில் ஒன்றாக ஒத்து வாழ்கின்ற குழவிகளுள் சில மனமுடைந்து நெறி பிறழ்ந்த நடத்தையில் இறங்குவதையும், சில நல்ல நிலைமையில் வாழ்ந்து வருவதையும் காண்கின்றோம். இவ்வாறு ஒரே புறநிலை ஒரு குழவியின் மன நிலையை ஒரு வகையாகவும், வேறொரு குழவியை வேறொரு வகையாகவும் தூண்டுகின்றது. எனவே, உண்மையை அறிய வேண்டுமாயின், புற நிலையை மட்டிலும் ஆராய்வதால் பயனில்லை. இதன் மனவாழ்க்கை முழுவதையும் நாம் அறிதல் வேண்டும்.

சில அறிதிறன் மிக்க சிறுவர்களும் வாழ்க்கையின் உண்மையைக் கருதாது நெறிபிறழ்ந்த நடத்தையில் இறங்குகின்றனர். இத் தவறு அறிவுக்குறைவினின்றும் வேறுபட்டது. திரும்பத்