பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சிலரிடம் அது சமூக விரோதமான செயல்கள் மூலம் வெளிப் பட்டு நெறிபிறழ்வினை உண்டாக்கும்.

மேற்கூறிய பண்புகள் யாவும் நெறி பிறழ்ந்த குழந்தைகள் அனைவருக்கும் பொதுவானவை என்று கருதுதல் தவறு. இதில் பொதுமைப் படுத்துதல் தீங்கு பயக்கும். இவர்களின் சமூகத் தன்மைக்குப் புறம்பான செயல்களுக்கும் பல காரணங்கள் இருக்கலாம். அவை யனைத்தையும் அறிந்த பின்னரே இக் குழவிகளின் நடத்தையைப் பகுத்தறிந்து அவைகளைத் திருத்து வதற்குத் திட்டம் வகுக்கலாம்.

நெறிபிறழ்வினைத் தடுத்தல்

நெறிபிறழ்வினைத் தடுப்பதற்குக் கீழ்க்கண்ட விதிகள் பெருந்துணை புரியும்: (i) நெறிபிறழ்ந்த நடத்தைக்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும். (ii) இயன்றவரை அக்காரணங்களை அகற்றுதல் வேண்டும். (iii) அதன்பிறகு உடன்பாடான கல்விமுறைச் சிகிச்சையினைத் தருதல் வேண்டும். இவ்விடத்தில்

நோய்நாடி நோய்முதல் காடி அதுதணிக்கும்
வாய்காடி வாய்ப்பச் செயல்.[1]

என்ற திருவள்ளுவர் தரும் சிகிச்சை முறையினை எண்ணி மகிழ்க.

மேற்கூறிய காரணங்களிலிருந்து அன்பு, பாதுகாப்பு, மனநிறைவு, தன்மதிப்பு, அறநெறிநிலை போன்றவை மீண்டும் இக்குழவிகளுக்குக் கிடைக்கச் செய்தால் அவர்கள் தீச்செயல்களில் இறங்கமாட்டார்கள் என்பது உறுதி. சிறுவர்களிடம் தோன்றும் பொருளாதார நிலையில் குறைவு, தகுதியின்மை, தாழ்வுணர்வு போன்ற குறைபாடுகளை உணர்ந்து அவற்றிற்குக் கழுவாய் கண்டால்-தக்க பரிகாரம் அளிக்கப்பெற்றால்-அச் சிறுவர்களிடம் நல்ல பொருத்தப்பாடு ஏற்பட்டுச் சிறந்த ஆளுமை வளர்ச்சியும் காணப்பெறும். அச்சிறுவர்களிடம் தான் என்ற எண்ணம் தூய நிலையில் வளர்ந்துவர உதவவேண்டும். இதற்கு எல்லையற்ற பொறுமையும், ஆழ்ந்த அன்பும், பரபரப்பு அற்றதோர் அமைதிநிலையும் வாய்க்கப்பெற்ற தொண்டர்கள் வேண்டும். இச்சிறுவர்களின் வாழ்க்கை வியத்தகு நிலையில் ஒவ்வொரு நாளும் திருந்திவரும் அற்புதத்தில் உறுதியான கடைப்பிடிப்பும், மக்கள் இயல்பே விளங்கும் கடவுள் நிலையில்


  1. குறள்.948