பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/388

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

369



ஈரமில்லாமல் காய்ந்திருக்கச் செய்யவேண்டும். இதனால் காய்ந்த சுகமான உணர்ச்சியில் விருப்பமும், ஈரமான வசதியற்ற உணர்ச்சியில் வெறுப்பும் ஏற்படக் குழந்தை பழகி விடுகின்றது. மூவாட்டைப் பருவத்தில் குழந்தை தானே எழுந்து சிறுநீர் கழித்தலைச் சமாளித்துக் கொள்ளவேண்டும். அதற்குமுன்னரே இதனைச் சமாளிக்க முயற்சி செய்தால் நரம்புக் கிளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சித் தொல்லைகள் நேரிடக் கூடும், முதல் அல்லது இரண்டாம் வயதில் சிறுநீர் கழிய வேண்டுமா? என்ற வினாவிற்கு ஆம், இல்லை' என்ற விடை வரவேண்டும். அதற்குப் பிறகு குழந்தை தானே சிறுநீர் கழியவேண்டும் என்று சொல்லவேண்டும். கடிதல் கேடே விளைவிக்கும்; வேண்டுமென்றே குழந்தை படுக்கையில் சிறுநீர் பெய்வதில்லை. ஆகவே, பெற்றோர் அதனைப் பொறுமையோடு கவனிக்கவேண்டும். முதலில் பகல் நேரத்தில் அடக்கியாளக் கற்றுக்கொடுத்தால், இரவிலும் அதை அடக்கியாளக் கற்றுக்கொள்ளும்.

சிறுநீர்ப் பையை அடக்கியாள முடியாமைக்கு இருகாரணங்கள் உள. ஒன்று, உடலைப்பற்றியது; மற்றொன்று, உள்ளத்தைப் பற்றியது. குழந்தை இரவில் சிறுநீர் கழிக்கும் நேரத்தைக் குறித்துக்கொண்டு அதற்குக் கால்மணி நேரத்திற்கு முன்பே குழந்தையை எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்தால் படுக்கையைச் சிறுநீரால் நனைக்கும் வழக்கத்தைச் சுமார் ஒரு திங்களிலிருந்து ஆறு திங்கட்குள் கட்டுப்படுத்திவிடலாம். இவ்வாறு முதற் காரணத்தைச் சமாளிக்கலாம். சிறுநீர்கழிந்த, கழியாத இரவுகளின் குறிப்பு ஒன்று வைத்துக் குழந்தைக்குக் காண்பித்தால், குழந்தையே தன் பொறுப்பை உணர்ந்து வெற்றிப்பெறத் துணைச் செய்யலாம். குழந்தை பெறும் வெற்றியே அதற்குக் கிடைக்கும் பரிசாகும். குழந்தை, சிறுநீர் கழித்தல் குறித்து எவ்வாற்றானும் குற்ற உணர்ச்சியும் இயலாமை உணர்ச்சியும் அடையாதபடி பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும்.

களவாடுதல்

களவாடுதலும்[1] மறைந்திருக்கும் ஒரு சிக்கலின் அறிகுறி. குழந்தை வேறு பலவகைகளில் உண்மையற்ற விதமாக நடந்து கொண்டாலும் இந்தச் சிக்கல் நிரந்தரமானதாகக் கொள்ளலாம். களவாடுதல் குழந்தை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப்பற்றி இருக்குமாயின், களவாடுதல் மிதமிஞ்சிய உடைமையூக்கத்தின்[2] செயற்படுதலாகும். களவாடுதலுக்குரிய


  1. 41. களவாடுதல் -Stealing.
  2. 42. உடைமையூக்கம் -Acquisitiveness.

க. உ.கோ.24