பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/389

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

கல்வி உளவியல் கோட்பாடுகள்


மேம்போக்காகத் தென்படும் காரணங்களும், ஆழ்ந்த உண்மையான காரணங்களும் பள்ளிக்கு வெளியே நடைபெறுபவை. ஆகவே, இப்பழக்கத்தைப் போக்குவதற்குப் பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. பழக்கத்தைப் போக்குவதற்கு முயற்சி எடுப்பதற்கு முன்னர் அஃது எழுவதற்குரிய ஊக்கிகளையும், பிற காரணங்களையும் நன்கு அறிதல் வேண்டும்.

காரணங்கள்: திருடுவதற்குரிய காரணங்கள் பல்வேறு பட்டவை; பல்வேறு தூண்டல்களால் எழுபவை. (1) உடைமை என்பதன் கருத்தினைச் சரியாக அறியாமை; பெரும்பாலோர் என்னுடையது உன்னுடையது' என்பவற்றின் வேற்றுமையை அறிவதில்லை. பள்ளிக்கு வருவதற்கு முன் இது கற்கப்பெற்றிருத்தல் வேண்டும். (ii) பொருள்களின் தேவை ஏற்படுதல்; அவற்றை எப்படி அடைதல் என்பதைப் புரிந்து கொள்ளாமை, பசி ஒரு வன்மையான ஊக்கி; அதனால் சில சமயம் சிலர் உணவுப் பொருளைத் திருடலாம். சமூகத்தில் ஒரு நிலையினை வகிப்பதற்காகப் பணம் தேவைப்படும்; அக்குழந்தை பணத்தைத் திருடலாம். (iii) சில சமயங்களில் மற்றப் பகுதிகளில் உள்ள நெருக்கடியை நிவர்த்திப்பதற்காகக் களவாடுதலை மேற் கொள்ளலாம். பிறருக்கு ஏதேனும் கொடுத்து அவருடைய நட்பு அல்லது பாராட்டுதலைப் பெறவோ, அல்லது மேல் வேடத்திற்காகவோ திருடலாம். பிற தொடர்புகளில் பாதுகாப்பில்லாத குழந்தை களவாடுதலில் மனநிறைவு கொள்ளலாம். (iv) பெரும்பாலும் திருடுவது பல்லாண்டுகளாக ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவே நடைபெறலாம். முதலில் களவு ஒரு பரிசோதனையாக மேற்கொள்ளப்பெற்று, அது கண்டுபிடிக்கப் பெறாததால், மீண்டும் மீண்டும் செய்யப்பெற்று வருகின்றது. அதில் எவ்வித மனநிறைவும் ஏற்படாததால் அது தொடர்ந்து மேற்கொள்ளப்பெறுகின்றது. (v) வேறு குழந்தையைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கமும், பெற்றோர் மீது காட்ட வேண்டிய எதிர்ப்பு மனப்பான்மையும், ஆசிரியர் மீது கொண்டுள்ள வெறுப்பும், நசுக்கப்பெற்ற பாலுணர்ச்சியும் சமூகத்திற்கு விரோதமான இச்செயலில் குழந்தைகளை இறங்கச் செய்கின்றன என்று சில உளவியலார் கருதுகின்றனர். பிற இயல்பூக்கங்கள் செயற்படத் தடைப்பட்டாலும் அத்தடையின் விளைவு உடைமையூக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது என்கிறார் பர்ட் என்ற அறிஞர். இயல்பூக்கங்கள் உள்ளத்தின் தனித்தனியான பொறி நுட்பங்கள் அல்லவென்பதையும்,அவை ஒரே மூலத்திலிருந்து பிரிந்த கிளைகளே என்பதையும் நினைவு