பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/392

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

373


யாகும். எதிர்பாராதவிதமாக மற்றொருவருக்குக் கிடைக்கப் பெற்ற அனுகூலம் ஒன்றைத் தான் துய்க்கலாம் என்று எதிர் பார்த்த ஆசை தடைப்பட்டால் இக்குணம் எழுகின்றது. இப்பண்பு சிறுவர்களைவிடச் சிறுமிகளிடத்தே அதிகமாகக் காணப் பெறுகின்றது.

பொறாமையைக் கிளப்பிவிடும் நிகழ்ச்சி சமூகம் பற்றியது; குழந்தை அதிகமாக அன்பு கொள்ளும் மக்களே அந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள்.

பொறாமை நிலைமைக்குத் தக்கவாறு வடிவம் எடுக்கும். எதிராளியை நேரடியாகத் தாக்குவது, நிந்தித்தல், பிடிவாதம் ஆகியவை போன்ற வடிவங்களை அஃது எடுக்கலாம். சிலரிடம் அது துயிலில் சிறுநீர் கழித்தல், பெருவிரல் சுவைத்தல், உணவு உண்ண மறுத்தல் போன்ற குழந்தைச் செயல்களையும் உண்டாக்கலாம். சற்று வளர்ந்த குழந்தைகளிடம் பொறாமை ஏற்படுங்கால் வாய்ப்பேச்சுச் சண்டை, வீண்பேச்சு, கதை கட்டி விடுதல், சினமூட்டும் குறிப்புகளை வெளியிடுதல், எள்ளுதல், இகழ்தல், கலகம் மூட்டுதல் போன்ற செயல்களை அது விளைவிக்கும். சில சமயம் பகற்கனவு, தற்பெருமை, உதாசீனம், கிண்டல் பேச்சு போன்ற தூண்டல்களையும் சிலரிடம் உண்டாக்கக்கூடும். வேண்டுமென்றே ஒரு குழவியைப் பொறாமைப்படச் செய்தல் அல்லது சினம் மூளச் செய்தல் ஒரு தீய செயலாகும்.

காரணங்கள் : பெரும்பாலும் பொறாமை ஏற்படுவதற்கு வீட்டு நிகழ்ச்சியே காரணமாகின்றது. தாய் குழவிகளிடம் கவனம் செலுத்துவதைத் தவிர்த்தால் குழந்தைகளிடம் பொறாமை எழுகின்றது. அதிகமான செல்லம் கொடுக்கும் தாய்மார்களும் குழவிகளிடம் பொறாமையை வளர்ப்பதற்குக் காரணமாகின்றனர். சில பெற்றோர் குழவிகளை அடக்குவதாலும், பாரபட்சம் காட்டுவதாலும் குழந்தைகளிடம் அத் தீய பண்பு ஏற்படுகின்றது.

ஒரு குழந்தை தன்னுடைய தன் மதிப்பை வளர்ப்பதாலும், மற்றக் குழவிகளின் நலனில் உண்மையான அக்கறை காட்டத் தூண்டுவதாலும், பெற்றோர் ஆசிரியர்களுடைய அன்பும் அக்கறையும் உறுதியாகத் தம்மிடம் இருப்பதாகக் குழவிகள் களிப்பதாலும் குழவிகளிடம் பொறாமை உண்டாகின்றது.

தடுக்கும் விதம் : பாரபட்சத்தை விலக்கவேண்டும். பெற்றோரோ ஆசிரியரோ ஒரு குழவியைப் பிரத்தியேகமான அன்புடையவன் என்று ஏற்றுக்கொள்ளலாகாது. சிறுவர்களிடம்