பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/403

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பற்றிப் பல உள்ளக் கிளர்ச்சிகளையுடையவனாக இருக்கின்றான். அன்னை உணவூட்டும் பொழுதும், சீராட்டிப் பாராட்டும்பொழுதும் மகிழ்கின்றான்; அவள் கடிந்துகொள்ளும் பொழுதும் ஒறுக்கும்பொழுதும் சினம் கொள்கின்றான்; அச்சுறுத்தும்பொழுது வெறுப்பு கொள்கின்றான். எனவே, அவனுடைய அன்னை பல நிலைகளுக்கேற்ப உவகை யூட்டும் பொருளாகவும், சினமூட்டும் பொருளாகவும், வெறுப்பூட்டும் பொருளாகவும் அமைகின்றாள். சிறுவனுடைய பட்டறிவுகளின்4 பயனாக அவனுடைய அன்னையைச் சுற்றிப் பல உள்ளக் கிளர்ச்சிகள் அமைகின்றன. இந்த உள்ளக் கிளர்ச்சிகளின் தொகுதியே-பிண்டமே--பற்று என்பது. சில எழுச்சிகளையும் விழைவுகளையும் குறிப்பிட்ட பொருள்களுடன் இணைத்துத் துய்க்கும் தனிப்பட்ட போக்கே பற்று என்பது என்பது மக்டுகலின் கூற்றாகும்.

சிறுவன் வளரவளர, அவனுடைய வாழ்க்கையில் பெரும் பகுதி பற்றுகளால் நிறைகின்றன; பள்ளியை நடுவாகக் கொண்டு பல பற்றுகள் வளர்கின்றன. தனிப்பட்ட ஆசிரியர்மீது பற்று உண்டாகின்றது. நமது நாட்டைப் பொருத்தமட்டிலும் குடும்பத்தின் மீது பற்று உண்டாகின்றது. அதன் பிறகு நாட்டை விரும்புகின்றோம். அதன் பயனாக நாட்டுக் குழைத்து, அழியாப்புகழ்பெற்ற, தன்னலமற்ற வீரர்கள் அறிஞர்கள் சமய துாதர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நாட்டுக்கொடி, நாட்டு வாழ்த்துப் பாடல் போன்றவற்றைப் போற்றுகின்றோம். பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாடலை ஈண்டு நினைவு கூர்க. இந்த விதமான உள்ளக் கிளர்ச்சிகளின் சேர்க்கை நாட்டுப்பற்றைக் குறிக்கின்றது. இந்தப் பற்றுகளைப்போலவே, மாணாக்கர் களுக்குப் பாடங்களிலும் பற்று அமைவதுண்டு. பற்றுப் பொருளைக் கதிரவனாகவும், உள்ளக் கிளர்ச்சிகளைக் கோள் களாகவும் உருவகப்படுத்தி உரைக்கலாம். கோள்கள் கதிரவனைச் சுற்றி வருவன போலவே, உள்ளக் கிளர்ச்சிகள் பற்றுப் பொருளைச் சுற்றுகின்றன.

காட்சிப் பொருள்களைச் சுற்றியும் மனிதர்களைச் சுற்றியும் பற்றுகள் அமைவன போலவே, கருத்துப் பொருள் களையும் குறிக்கோட் பொருள்களையும் சுற்றிப் பற்றுகள் படிகின்றன. இவற்றை அறப் பற்றுகள்5 என வழங்குவர். அன்பு, நீதி, நேர்மை, உண்மை போன்ற கருத்துப் பொருள்களைச்


4. பட்டறிவு-Experience.
5. அறப் பற்றுகள்-Moral sentiments.