பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/404

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

385


சுற்றிப் பற்றுகள் ஏற்பட்டு மாணாக்கர்களின் நல்லொழுக்கம் வளர்கின்றது. அறப் பற்றுகள் யாவும் சமூக வாழ்க்கையின் விளைவால் ஏற்படுபவை. சில சமூகத்திற்கும், சில சமயங் களுக்கும், சில சங்கங்களுக்கும் பல அறப் பற்றுகள் தலைமுறைத் தலைமுறையாக வந்து கொண்டுள்ளன. ராஸ்6 என்ற உளவியல் அறிஞர் அறப்பற்றுகள் காட்சிச் சிறப்பு, காட்சிப் பொது, கருத்து என்ற ஒழுங்கில் வளர்வதாகக் கூறுவர். ஒரு சிறுவன் தான் வாழும் சூழ்நிலையில் உள்ள குறிப்பிட்ட ஒருவர்மீது அன்பு செலுத்துகின்றான்; இங்கு அச்சிறுவனின் அன்பு என்னும் பற்று காட்சிச் சிறப்புப் பற்றாக அமைகின்றது. பிறகு இவரைப் போன்ற பலரிடமும் அன்பு செலுத்துகின்றான்; இப்பொழுது அப் பற்று 'காட்சிப் பொதுப்' பற்றாக அமைகின்றது. இறுதியாக, அச்சிறுவன் அம்மாந்தர் அனை வரும் பின்பற்றும் பண்பின்மீது அன்பு செலுத்துகின்றான்; இப்பொழுது அப்பற்று கருத்துப் பொருள் பற்றாக அமைந்து விடுகின்றது. அச்சிறுவன் துணிவான ஒருவரை விரும்பலாம்; பிறகு துணிவானவர்கள் அனைவரையும் விரும்புவான்; இறுதி யாகத் 'துணிவு' என்பதையே விரும்பும் நிலை அவனிடம் அமைந்து விடுகின்றது.

அறப் பற்றுகள் எங்ங்னம் அமைகின்றன என்பதை ஆசிரியர்கள். நன்கு உணர்ந்து அதற்கேற்பக் குழந்தை வாழும் சூழ்நிலையை நற்பண்புகளின் எடுத்துக்காட்டுகளால் நிரப்ப வேண்டும். குழந்தை இளங்குமரப் பருவத்தை எய்தியதும் இலக்கியத்திலும் வரலாற்றிலும் காணும் குறிக்கோள் மாந்தர் களை அவனுக்கு இலக்காக வைக்கலாம். இராமன், பரதன், இலக்குவன் போன்ற காவிய மாந்தர்களையும், பெரிய புராணத்தில் காணும் பல நாயன்மார்களையும் இன்னும் இவர்கள் போன்ற பலரையும் குறிக்கோள் மாந்தர்களாகக் கருதலாம். புத்தருடைய வாழ்க்கை ஒர் எடுத்துக்காட்டான வாழ்க்கையாகும். நம்முடைய நாட்டுத் தந்தை காந்தியடிகளின் வாழ்க்கையும் இத்தகையதே.

இத்தகைய அறப் பற்றுகளைப் பெற்று, அவற்றை நன்கு சிந்தித்து, அவற்றைத் தற்பற்றினுள்7 அடக்கி யமைப்பதே அறத்துறைப் பண்பாடென்பது. நன்மை, உண்மை, தூய்மை ஆகியவற்றை நாம் விரும்புபவர்களாக நம்மை நாம் கருதினால், இப்பண்புகள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தலை


6. ராஸ்-Ross.
7. தற்பற்று-Self-sentiment.
க. உ. கோ.25