பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/413

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பெறவிருக்கும் அருமையான படக்காட்சிக்குப் போவதா?" என்று மாணாக்கன் எண்ணுகின்றான். இன்னொருவன் ஆசிரியர் வேலைக்குப் பயிற்சி பெறுகின்றான்; பயிற்சி இன்னும் ஒன்றிரண்டு திங்களில் முடிந்துவிடும். அப்பொழுது எழுத்தர் வேலை31 நியமன ஆணை ஒன்று அவனை வந்தடைகின்றது. எபயிற்சியை முடிப்பதா, அன்றி எழுத்தர் பதவியை ஏற்றுக் கொள்வதா? என்று கலங்கி நிற்கின்றான். இன்னோர் இளைஞன், காதலூக்கத்தை நிறைவேற்ற இல்லத்திலிருப்பதா, அல்லது சமூகத்தொண்டு புரிய வெளிச் செல்வதா? என்று சிந்தனை செய்கின்றான். இரண்டிலுமுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இஃது பற்றுகளைப் பொறுத்ததாகும். இத்தகைய இடர்ப்பாடான நிலைகளில்தான் மேலே குறிப்பிட்ட தன் மதிப்புப்பற்று துணையாக நிற்கின்றது. இஃது அவனுக்கு வேண்டிய ஆற்றலைத் தந்து பிறவழிகளைப் புறக்கணித்து அடக்கியாளச் செய்யும். அஃதாவது, தாழ்ந்த துடிப்புகளையும் இயல்பூக்கங்களையும் குறிக்கோளாக நிற்கும் தன் மதிப்புப் பற்றின் ஆற்றலால் வெல்லுதல் ஆகும்.

மன உறுதியின் உரம் இயல்பூக்கங்களின் அடிப்படையில் இயங்கும் உள்துடிப்புகளின் உரத்தைப் பொறுத்தது. மன உறுதியின் தரம் அவன் கொண்ட குறிக்கோளின் தரத்தையும், போராடும் குறிக்கோள்களின்மையையும் பொறுத்தது. குறிக்கோள் சிறப்பாக அமையின் மன உறுதியும் சிறந்ததாக அமையும்; ஒழுக்கமும் உயர்ந்ததாக அமையும். எனவே, மாணாக்கர்களிடம் சரியான மன உறுதி அமைய ஆசிரியர்களும் பெற்றோர்களும் தக்க கவனம் செலுத்தித் தகுந்த நிலையில் பயிற்சியும் அளித்தல் வேண்டும்.

மாணாக்கர்களிடம் மன உறுதியை வளர்க்க வேண்டு மாயின், பள்ளிகளில் அவர்கள் தாமாகச் செயலாற்றவும் பொறுப்பேற்கவும் வாய்ப்புகளை நல்குதல் வேண்டும். தன்னாட்சி முறை, தனிவேலை, குடிமைப் பயிற்சி போன்ற துறைகளில் ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சிகள் இதற்குப் பெரிதும் பயன்படும். அநுபவமின்மையால் மாணாக்கர்கள் தவறு இழைத்தல் கூடும் என எண்ணி அவர்கள் செய்யவேண்டிய முடிவுகளை நாமே அவர்களுக்காக இயற்றுவதில் அவர்களுக்கு நலம் பயக்காது என்பதை நாம் உணர்ந்து வருகின்றோம். உரமான உறுதியுள்ள பெற்றோரின் குழந்தைகளில் பலர் உரமற்ற மன உறுதியுள்ளவர்களாக இருப்பதற்குக் காரணம்


31. எழுத்தர்-Clerk.