பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/418

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

399


துணிவை வெளியிட வாய்ப்பு வேண்டும். பெரியோர்களின் எடுத்துக்காட்டும் இன்றியமையாதது. அறவுரையால் பயனில்லை; செய்து காட்டலே வேண்டப் பெறுவது.

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.39

பள்ளியின் அன்றாட நிகழ்ச்சிகளில் சிறுவர்களிடம் பயன் படும் பல பழக்கங்களை ஏற்படுத்தலாம்; வளரச் செய்யலாம். பட்டறிவு மிக மிக மாணாக்கர்கள் தம் மனச்சான்றிற்குப் பொருந்தும் செயல்களையே செய்ய விழைகின்றனர். தங்கள் நடத்தையையும் பிறர் நடத்தையையும் மதிப்பிடவும் முயல்கின்றனர்.

விளையாடு களத்தில் நல்லொழுக்க வளர்ச்சிக்குப் பல வாய்ப்புகள் தரலாம். ஒவ்வொரு வகை விளையாட்டிற்கும் தலைமைப் பொறுப்பு மாணாக்கர்களுக்கே தரலாம். பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தேர்தல் முறையில் மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுங்கால் இதற்குப் பல வாய்ப்புகள் எழுகின்றன.

பள்ளியில் குழுஉக் கிளர்ச்சி40, விளையாட்டுகளாலும், பள்ளி விழாக்களாலும், இலக்கியக் கழகங்களாலும், பல்வேறு போட்டிகளாலும், ஆசிரியரின் செயல்களாலும் வளர்க்கப் பெறுகின்றது. நாட்டுப்பற்று. சர்வ தேசப்பற்று, வாழ்க்கை நோக்கம், சகோதரத்துவம், சமதருமம், சமூகத்தொண்டு போன்ற பண்புகள் பள்ளியில்தான் வளர்க்கப் பெறுதல் வேண்டும். பிற்காலத்தில் மாணாக்கரின் முழுமையான வாழ்க்கையின் நோக்கத்தைப் பள்ளி ஒரளவு நிறைவேற்ற வேண்டும். மேற்கூறியவை நிறைவேறாவிடில், பள்ளி எதைச் சாதித்தாலும் பயனில்லை. ஒழுக்கமே வாழ்க்கைக்கு விழுப்பம் தருவது; அதுவே வாழ்க்கையின் உயிர்நாடி என்பதைப் பயிற்றுவோர் என்றும் நினைவில் வைத்துப் பணியாற்ற வேண்டும்.

ஒழுக்க வளர்ச்சியில் பள்ளியின் முயற்சியையும்
வீட்டின் முயற்சியையும் இயைபுறுத்தல்

பள்ளியும் வீடும் இரண்டு சிறந்த கல்வி நிலையங்கள், ஒழுக்கம் மிகச் சிறிய பருவத்திலேயே அமைவதால், அதில் வீடு அதிகப் பங்கினைப் பெறுகின்றது. மாணாக்கர்களின்


39. குறள்.664.
40. குழுஉக் கிளர்ச்சி-Espirit-de-corps.