பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/439

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

கல்வி உளவியல் கோட்பாடுகள்


பிறகுதான் கற்றல் தெர்டங்குகின்றது என்றும், பயிற்சி முடிந்து பட்டமோ சான்றிதழோ பெற்ற பிறகுதான் கற்பித்தல் தொடங்குகின்றது என்றும் இன்றைய ஆசிரியர் அறிய வேண்டியது மிகவும் இன்றியமையாதது. "அறிதோறும் அறியாமை கண்டற்றால்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை அவர்கள் எண்ணி ஒர்தல் வேண்டும்.

நவீன வாழ்க்கையில் அறிவின் எல்லை எல்லாத் துறை களிலும் விரிந்து கொண்டே போகின்றது. தவிர, நாம் கல்லூரிகளில் பயிலும்பொழுது ஒவ்வொரு துறையிலுமுள்ள் அறிவு நுட்பங்களையெல்லாம் புரிந்து கொண்டு விட்டோம் என்றும் சொல்லுவதற்கில்லை.

"ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
காற்கூறு அல்லது பற்றலன் ஆகும்."[1]

என்ற நன்னூல் நூற்பாப்படி ஆசிரியர் கற்பித்த பொருளை நிறையக் கற்கினும் அவருடைய புலமைத் திறத்தில் காற்பங்கு கூட நம்மிடம் ஏற்படாது.

"அவ்வினையாளரோடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்."[2]

என்ற நூற்பாப்படி உடன்பயிலும் மாணாக்கர்களுடன் கலந்து ஆராயும்பொழுது இன்னொரு கால்பங்கும், தான் படித்தவற்றைப் பிறர் உணர விரித்துரைக்கும்பொழுது எஞ்சியுள்ள இரண்டு காற்பங்குகளும் நம்மிடம் படிகின்றன. எனவே, தொடர்ந்து கற்றுக்கொண்டே யிருந்தால்தான் அறிவும் நிரந்தர மாக நிலைநிற்பதோடன்றி அது பெருகவும் செய்யும்; பல நுட் பங்களை அறியவும் வாய்ப்புக் கிடைக்கும். இவ்விடத்தில் நன்னுாலாசிரியர் கூறும்,

"முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்"[3]

என்ற நூற்பாவும் நினைவுகூர்தற்பாலது. மூன்று முறை நன்கு பாடங்கேட்டால்தான் ஆசிரியர் கற்பித்தவற்றைப் பிறருக்கு எடுத்து உரைத்தல் இயலும். ஆனால், இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பர்டங்கள் விரைந்து போகின்றன; எல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரிதான். இந் நிலையில் ஆசிரியர் மேலும் கற்றல்-தொடர்ந்து கற்றுக் கொண்டே இருத்தல்-இன்றியமையாதல்லவா?


  1. நூற்-44
  2. நூற்-45
  3. நூற்-43