பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/447

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

கல்வி உளவியல் கோட்பாடுகள்


ஆராயலாம். பயிற்றல் முறைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சிகளை சொற்பொழிவுகள் மூலமும் சொற் போர்கள் மூலமும் பரவச் செய்யலாம். ஆராய்ச்சி மனப்பான்மை வளர இக்கழகங்கள் பெருந்துணைபுரியும்; பல புதிய கருத்துகளைச் சோதிக்கவும் இங்கு இடம் உண்டு.

பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்சிப் பள்ளி கல்லூரிகளை விட்ட பிறகு ஆசிரியத் தொழில்பற்றிய எந்த நூல்களையும் படிப்பதே இல்லை. படிக்கும் ஆர்வமும் அவர்களிடம் இருப்பதில்லை. சிலர் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள் என்று தவறாகவும் எண்ணுகின்றனர். தம்மைப் போலவே இடை விடாது ஊக்கத்துடன் பிற இடங்களில் பணியாற்றும் ஆசிரியர் களினுடையவும் கல்வி வல்லுநர்களினுடையவும் உளவியல் அறிஞர்களினுடையவுமான அநுபவங்களே நூல்வடிவம் பெற்றுள்ளன என்பதைச் சிந்தித்து ஒர்வார்களாயின், அவர் களிடம் இத்தவறான கருத்து இடம்பெறாது. இன்று ஆசிரியப் பணிபற்றிய வெளியீடுகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு ஆசிரியருக்கும் அன்றாட வேலையில் குறுக்கிடும் பல பிரச்சினைகளை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தம் அநுபவத்தில் கண்டு அவற்றிற்குத் தீர்வுகளும் கண்டிருப்பதை இத்தகைய வெளியீடுகளைப் படிப்பதனால் அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைப் பிரச்சினை களைப்பற்றிச் சிந்திப்பதே இல்லை. சிலருக்கு அத்தகைய பிரச்சினைகள் இருப்பதாகத் தோன்றுவதுமில்லை. இதற்குக் காரணம், அவர்கள் தாம் மேற்கொள்ளும் கற்பிக்கும் முறை களைத் திறனாயும் முறையில் பாகுபாடு செய்து கையாளாமையே. பல கருத்தரங்குகளிலும் பணிமனைசாலை ஆராய்ச்சி முறைகளிலும் பல ஆசிரியர்களுடன் கலந்து பழகும் வாய்ப்புள்ளவர்கள் பெரும்பான்மையோரிடம் காணப்பெறும் எடுப்பான இக் குறைகளைக் கட்டாயம் காணச் செய்வார்கள். அருட்பணி புரியும் ஒரு தொழிற் குழுவினரிடம் இத்தகைய குறைபாடு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

இத்தகைய குறை ஆசிரியர்களிடம் காணப்பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆசிரியப் பள்ளிகளில் பயிற்சி பெறுங்கால், பயிற்சித் திட்டம் பெரும்பாலும் பொருளறிவு பெறுவதாகவே அமைந்துள்ளது; கற்பித்தல் துறையில் அவசியம் குறுக்கிடும் பல பிரச்சினைகளில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் உள்ள திறன் களை வளர்ப்பதில் அஃது அதிகக் கவனம் செலுத்துவதற்குத் திட்டத்தில் அதிக இடம் இல்லை; அப்படி இருப்பினும் பயிற்சிப்-