பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/452

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

433


அவர்களுக்கும் பாதுகாப்பு, பாராட்டு, புதிய அநுபவம், விடுதலை முதலியவை வேண்டும். இவை தடைப்படின் ஆசிரியர்கள் தம் பணியைத் திறமையுடன் செய்ய இயலாது. ஆசிரியர்களின் ஊதியக் குறைவு உலகறிந்த செய்தி. இன்று இந்நிலை மேம்பாடு அடைந்துள்ளது. இதன் காரணமாகவே தகுதியுடைய பலர் இப் பணியை மேற்கொள்ள முன்வருவதில்லை. இத்தொழிலை மேற்கொண்டவர்கள் பலர் பொருளாதார நிலையால் சொல்லொணாத் துயரம் உறுகின்றனர்.

இன்னொரு முக்கிய செய்தி. சமூகம் ஆசிரியர்களிடம் துறவி களிடம் இருப்பதைப் போன்ற கடுமையான நடத்தையை எதிர் பார்க்கின்றது. ஆசிரியர்கள் சிறந்த பண்புகளின் இருப்பிடமாக இருத்தல் வேண்டும் என்று சமூகம் கருதுகின்றது; அரசினரும் அங்ஙனமே கருதுகின்றனர். சிறுவர்களுக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். எடுத்துக்காட்டாக, புகை பிடித்தல், பொடி போடுதல், சீட்டாடுதல் போன்ற செயல்கள் ஆசிரியர்கட்குச் சிறிதும் தகுதியற்றவை என்று கருதப்பெறுகின்றன. ஆனால், ஆசிரியர்களின் அவப்பேற்றின் காரணமாக சமூகமோ, அரசினரோ அவர்கள் ஆற்றும் தொண்டிற்கேற்பவும், தாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் பிறவற்றிற்கேற்பவும் சிறப்பு ஊதியமோ அளிக்கப் பெறுகின்றதா என்பதைச் சிறிதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வக்கு அற்றவனுக்கு வாத்தி என்ற ஏளனச் சொற்றொடர் பலர் வாயினின்றும் பிறக்கின்றது.

குழந்தைகளோடும் பள்ளியோடும் அநுபவமில்லாத முதியோர் பலர் ஆசிரியப் பணியை எளிதென்று கருது கின்றனர். உண்மையாக எண்ணிப் பார்த்தால் அதைப்போல் கடுமையான வேலை நெருக்கடி பிற தொழில்களில் இல்லை. பாடத்திட்டபடிக் கற்பித்தல், பிரச்சினைகளை முன்பே சிந்தித்தல், சிறுவர்களை ஊக்குதல், அவர்கள் வேலையை நன்கு மதிப்பிடல், தவறுகளை எதிர்பார்த்துத் தடுத்தல், அவற்றிற்குத் தக்க மாற்றுகளைக் காணல், பணியின் பல பகுதிகளை இணைத்தல், சிறுவர்களின் ஊசலாடும் கவனத்தை நிலை நிறுத்தல் போன்றவை செய்வதற்குப் பள்ளி நேரம் முழுவதும் தேவை. அந்நேரத்திற்கு முன்பும் பின்பும் செய்ய வேண்டிய பணிகளும் உள்ளன என்பதைப் பலர் அறிவதில்லை. விடுமுறை நாட்களிலும் பணியுள்ளது. இவற்றைத் தவிர, ஆசிரியர்கள் சிறுவர்கள், தலைமையாசிரியர், தணிக்கையாளர்,
க. உ. கோ.28.