பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/456

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசான்

437


உயிருடனும் இயங்கும் ஆசிரியரின் ஆளுமையால் உணர்வூட்டம் பெறாவிட்டால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறா."

பிரெளன்[1] என்பாரின் இக்கூற்று எல்லா நிலைக் கல்விக்கும் முற்றிலும் பொருந்தும் என விளக்க வேண்டியதில்லை. ஒரு நாட்டின் பெருமை அதன்பரப்பு, மலைகள், காடுகள், கனிகள்[2] ஆயுதச்சாலைகள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பொறுத்ததன்று; ஆனால் அஃது அந்நாட்டின் பள்ளிகளின் நிலையையும், ஆசிரியர்களின் தன்மையையும் பொறுத்ததாகும். இப்பேறு ஆசிரியருடையதே என்பது வெளிப்படை.

எல்லாப் பணிகளும் சமூகச் சேவையேயாயினும் வருங் கால நற்குடிகளை உருவாக்கும் அருட்பணி ஆசிரியர் பொறுப்பில்தான் உள்ளது. குழந்தையின் உடல், உள்ளம், நடத்தை முதலியவற்றைச் சீர்திருத்தி அதனிடம் சிறந்ததோர் ஆளுமையை வளர்ப்பது ஆசிரியரின் கையில்தான் உள்ளது. விடுதலை பெற்ற நம்நாட்டில், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையுள்ள இக்காலத்தில் ஆசிரியரின் தொண்டிற்குத் தனிச் சிறப்பு உண்டு என்பதை அனைவரும் அறிவர். உலக அமைதி நிலவ வேண்டுமாயின், அதற்கு வேண்டிய வித்துக்களை ஆசிரியர்தாம் இளம் மாணாக்கர்களின் உள்ளத்தில் ஊன்ற வேண்டும். ஒரு நாட்டின் விளைவைப் பெருக்கவும், கைத் தொழில்களை வளர்க்கவும், பொறியியல் தொழில்களை நிறுவவும் கல்விதான் இன்றியமையாதது என்பதை நாம் அறிவோம். கல்வியை அளிப்பது ஆசிரியர் அன்றோ? வழக்கறிஞர் பணியி லுடனும் மருத்துவப் பணியுடனும் ஆசிரியப்பணியை ஒப்பிட்டு நோக்கின் அதன் மேன்மை தெளிவாகப் புலனாகும்.

ஆசிரியப் பணியின் சிறப்பை நம் நாட்டார் பண்டைக் காலத்தில் நன்கு அறிந்திருந்தனர். "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற சொற்றொடரில் ஆசிரியரின் நிலை தெளி வாகின்றது. ஆனது பற்றியே அறிவுக்கண் வழங்கும் ஆசான், :எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்று கடவுளுடன் ஒப்புமைப்படுத்திப் பேசப்படுகின்றான். மாணாக்கர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு ஆசான் முதற்காரணம் அன்றோ? இராமனது ஆளுமை வளர்ச்சிக்கு வசிட்டனே காரணம் என்பதை விசுவாமித்திரன் சனகனுக்கு உணர்த்தும் வாயிலாகக் கம்ப நாடன் கூறுவான்:


  1. Brown, J. F. - The American High School, p. 78.
  2. 35. கனிகள்-Mines