பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/457

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

கல்வி உளவியல் கோட்பாடுகள்


திறையோடும் அரசிறைஞ்சும்
செறிகழற்கால் தசரதனாம்
பொறையோடும் தொடர்மனத்தான்
புதல்வரெனும் பெயரேகாண்;
உறையோடு நெடுவேலாய்!
உபநயன விதிமுடித்து
மறையோடுவித்து இவரை
வளர்த்தானும் வசிட்டன் காண்.[1]

"இராம இலக்குமணர் தசரதனின் குமாரர்கள் என்பது பெயரளவில்தான்; அறிவையூட்டி ஆளுமையை வளர்த்த பெருமை ஆசானாகிய வசிட்டனைச் சார்ந்தது" என்ற கவிஞனின் கூற்று சிந்தனைக்குரியது. இதனை ஆசிரியரும் பெற்றோரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.


மக்களது சிந்தனை அவர்களது உணர்ச்சியின் வன்மையால் திரிகின்றது என்பது நாமறிந்ததே. ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கு அல்லர். தாம் கொண்ட கருத்தை ஆராயாது "தா அனாட்டித் தனாது நிறுத்தல்", அவாவாலும் அச்சத்தாலும் முடிவுகளை அநுமானித்தல் ஆகியவை மனித இயல்புக்குட்பட்டவை. தவிர, மக்களாட்சி நிலவும் இக் காலத்தில் பல்வேறு கட்சியினரைச் சார்ந்தவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிப்பர். இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து ஆசிரியர்கள் சமய, அரசியல் சார்புடைய தம் உள்ளக் கிளர்ச்சிக் கோளாறுகளுக்கு இடங் கொடுக்காது தம் பணியைக் கடவுட்பணி எனக் கருதி ஆற்ற வேண்டும். எக்காரணத்தாலும் கொள்கையைத் திணிக்கும் மனப்பான்மைக்கு இடங்கொடுத்த லாகாது. எண்ணிப் பார்த்தால் ஆசிரியரின் பொறுப்பு பெரியது; மிகப் பெரியது. கடவுட்டன்மை வாய்ந்தது.


  1. 36, கம்ப.பாலகுலமுறை செய். 24.