பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனும் சூழ்நிலையும்

27


மாக நடைபெறுகின்றது. மனிதனின் நோக்கம் வாழ்க்கை மட்டுமன்று; உண்மை, நேர்மை, அழகு போன்றவை நிறைந்த நல்வாழ்க்கையாகும் அது. மனிதன் இயற்பியற் சூழ்நிலைக்கும்: சமூகச் சூழ்நிலைக்கும் இணங்க மாறுபாடுகளை அடைகின்றான்; ஒரளவு ஒருவாறு சூழ்நிலைகளையும் மாற்றி அமைக்கின்றான். இங்கனம் கொடுத்து வாங்கும் அநுபவத்தினால் அறிவு உண்டாகின்றது; திறமை ஏற்படுகின்றது; உள்ளக்கிளர்ச்சி மாற்றங்களும் நடைபெறுகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவுகளே அநுபவம் என்பதும் கற்றல் என்பதும். விரிந்த பார்வையில், கல்வி என்பது இந்தப் பொருத்தப் பாடேயாகும்.

கல்வி என்பது பொருத்தப்பாடே: பிறந்த குழந்தையும் பள்ளியில் சேரும் மாணாக்கனும் இயற்பியற் சூழ்நிலைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும்[1] பொருத்தப்பாடு அடைவதில் பிறர் உதவியை நாடுகின்றனர். பெற்றோரும் ஆசிரியரும் தக்கவாறு இவர்கட்கு உதவவேண்டும். எல்லாவிதப் பொருத்தப்பாடுகளுள்ளும் தனியாளின் தேவைகளுக்கும், அத்தேவைகளை நிறைவேற்றச் சூழ்நிலை அளிக்கும் வாய்ப்புகளுக்கும் தனியாளின் திறமைக்கும் இடையேயுள்ளதோர் சிக்கலான சம்பந்தம் அடங்கியுள்ளது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதனால் நாம் விரும்பும் துலங்கல்கள் ஏற்படாவிடினும், குறிப்பிடத்தக்க விளைவுகள் ஒழுங்கான முறையில் ஒரளவு ஏற்படத்தான் செய்கின்றன. இந்த உண்மையின் அடிப்படையில்தான் கல்வி என்பது அமைகின்றது. ஆழ்ந்து சிந்திப்பின், இப்பொருத்தப்பாடே கல்வி என்றாகிறது. -

எனவே, கல்வி ஏற்பாட்டின்[2] முதல் விதி யாது? நிகழ்ச்சிகள், செயல்கள், தொடர்புகள் முதலியவற்றைத் திட்டமிடுங்கால் அவற்றிற் கொத்த பொருள்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்காக அமைந்த அநுபவங்களினால் கற்போரிடம் ஏற்படும் துலங்கல்கள் குறிப்பிடத்தக்க செய்தியைத் திரட்டித் தருகின்றன; அவர்களிடம் பயன்படத்தக்க பழக்கங்கள் ஏற்படு கின்றன. சொந்தமுறையில் பண்பாடும் சமூக வாழ்வும் அமைவதற்கேற்ற மனவெழுச்சியின் பலன்களும் திரள்கின்றன. சமூகமும் ஒழுங்கான கல்வியினால் கற்போரிடம் சரியான பொருத்தப்பாடு அமைவதற்கேற்ற நிலைமைகளைத் தேர்ந் தெடுக்க விரும்புகின்றது. இதனால் நல்ல, பரந்த, விதவிதமான


  1. 4. சமூக சூழ்நிலை-Social environment
  2. 5. கல்வி ஏற்பாடு-Curriculum.