பக்கம்:கல்வி எனும் கண்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கல்வி எனும் கண்


வருந்தத்தக்க மற்றொன்றையும் கூறவேண்டும். சென்ற ஆண்டு 1990 மார்ச்சு ஏப்பிரலில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு இந்த ஆண்டு மே வரையில் (1991-மே) உரிய பட்டச் சான்றிதழ் வழங்கவில்லை எனின் அப்பிள்ளைகளின் நிலை என்னாவது ‘Indian Express’ என்ற நாளிதழில் (11-9-91) K.K. ரங்கன் என்ற மாணவர் (Varsity Lapses) அத்தகைய அவல நிலையில் தான் மட்டுமன்றி இன்னும் பலர் நிலையினையும் சுட்டி எழுதியுள்ள கடிதம் பல்கலைக்கழக அவல நிலையினை விளக்குகின்றது.

பல்கலைக்கழக அறிஞர் கூட்டமும் பேரவையும் பிறவும் நடைபெறும்போது ஒருவர் காண நேரிட்டால் அது ஒரு போர்க்களமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும் என்பர். ஆசிரியர் குழுவினர் எழுப்பும் வினாக்களுக்குப்பதில் சொல்ல முடியாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லல் உறுவது பரிதாபமாக இருக்கும். பல கல்லூரிகள் தவறு இழைக்கின்றன. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பல்கலைக் கழகமும் கல்லூரி இயக்ககமும் வாளா இருப்பதோடு, அவற்றை ஆதரிக்கவும் செய்கின்றன. அவற்றின் தலைவர்களே ஆட்சிக் குழுவில் இருப்பதாலோ, அன்றி வேறு உயர்மட்ட நிலையில் ஆணை செலுத்துவதாலோ அன்றி லட்சக்கணக்கில் வாங்கும் பணத்தை வாரி இறைப்பதாலோ விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டியவர்கள் வாய்மூடி மெளனியாகிக் கிடக்கிறார்கள். நாட்டுக் கல்வி நலமுற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தத்தம் பதவியால் தம் வளனைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். அவரவர்கள் தற்போதுள்ள பதவிக்கு வருமுன் எந்தெந்த வழியால்- யார் யாரை மிதித்தும் துவைத்தும் வந்தோம் என்பதைத் திரும்பிப் பார்க்கவேண்டும். அப்போது பல உண்மைகள் அவர்களுக்கே விளங்கும். அரசாங்கமும் இத்தகைய களைகளை உடன் களைய ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையானால் புரையோடி, கல்வி எனும் காரிகைக்கே இறுதி