பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வெட்டில் தேவார மூவர்

11


1. திருஞானசம்பந்தர்‌

சொற்கோவும்‌, தோணிபுரத்‌ தோன்றலும்‌, சுந்தரரும்‌ திருநெறிய மெய்ஞ்ஞானத்‌ தமிழ்‌ பாடிச்‌ சைவம்‌ பரப்பியவராவர்‌. இம்‌ மூவரும்‌ பல்லவப்‌ பேரரசு நிகழ்ந்த காலத்தில்‌ திகழ்ந்தனர்‌. சுந்தரர்‌ தம்‌ நாளிலும்‌ தமக்குமுன்னும்‌ இருந்த அடியார்களைத்‌ திருத்தொண்டத்‌ தொகையால்‌ துதித்தார்‌.

அந்நாள்‌ முதல்‌ பெரியபுராணம்‌ பாடப்‌ பெற்றது வரையிலும்‌ அதற்குப்‌ பின்னும்‌ செந்தமிழ்நாட்டுச்‌ சான்றோர்‌ அளவிலாத பெருமையுடைய அடியார்களை அமையம்‌ வாய்ப்புழி எல்லாம்‌ போற்றியுள்ளனர்‌ என்று கல்லெழுத்துக்களால்‌ அறிய வருகிறது.

திருஞானசம்பந்தரைப்‌ பற்றிக்‌ கல்வெட்டுக்களினின்று அறியப்படுவனவற்றுள்‌ சில காண்போம்‌.

திருஞானம்‌ பெற்ற பிள்ளையார்‌

“போதையார்‌ பொற்கிண்ணத்து அடிசில்பொல்‌ லாதெனத்‌

தாதையார்‌ முனிவுரத்‌ தானெனை ஆண்டவன்‌”

என்பது சம்பந்தர்‌ வாக்கு.

அம்மையும்‌ அப்பனும்‌ இங்ஙனம்‌ பாலமுதைச்‌ சம்பந்தருக்கு அளித்து ஆட்கொண்டமையால்‌ சம்பந்தர்‌ ஆளுடைய பிள்ளையார்‌ ஆயினார்‌. சேக்கிழார்‌ பெருமானும்‌,

“யாவருக்கும்‌ தந்தைதாய்‌ எனும்‌ இவர்‌ இப்‌ படியளித்தார்‌
ஆவதனால்‌ ஆளுடைய பிள்ளையாராய்‌.......

.......சிவஞான சம்பந்தராயினார்‌”

என்பார்.