பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

21

ஜில்லாவை மிஞ்சித்தான். தோசைக்குத் தொட்டுக்க இல்லாமலே தின்னலாம்.

நாடார் பாத்திரக் கடை வைத்திருக்கிறார். ஒரு நாள், வீதியில் நடந்து கொண்டிருக்கையிலேயே சர்க்கரைக்கு ஸ்பூனில்லை... ஞாபகம் வந்து, அந்த நிமிஷத்தில் எதிர்ப்பட்ட எவர் ஸில்வர் கடையுள் நுழைந்தால் கல்லாவில் நாடார் உட்கார்ந்திருக்கிறார், முக்குருணிப் பிள்ளையார் மாதிரி. உடனே கண்ணில் அடையாளம் பளிச்சிட்டது. தேங்காய் உடைத்தாற்போல் வெள்ளைச் சிரிப்பு. எழுந்து கை கூப்புகிறார். கண்ணில் ஒரு மருட்சி.

“ஐயா வாங்க வாங்க, இங்கே குந்துங்க, இதோ பக்கத்துலே-”

உள்ளே போனதும் வெட்கமாப் போயிடுத்து. உள்ளே நெரியற அந்தக் கூட்டமும்...ஒடியாடற சிப்பந்திகளும் !...சரக்கே பெரிய ரெண்டுக்குக் குறைவில்லை, இங்கே ஒரு ஸ்பூன் வாங்க வந்தேன் என்று எப்படிச் சொல்ல? நாடார் பின்வாங்க விடவில்லை.

“ஏலே பையா, யாரங்கே, காபி ஒண்னு வாங்கி வாடா.”

“பாக்கிமுத்து, சாமி நம்ம வீட்டு மாடியிலே குடியிருக்காஹ”. இளிக்கிறான், வணங்குகிறான். எல்லோரும். ஒரே ஊர், ஒரே ஜாடை. உறவு ஜாடையோ என்னவோ தெரியாது. ஆனால் ஒரே ஊர் ஜாடை. அந்த ஸ்பூனுக்கு, தனி சொட சொடாப் பேப்பரில் சுத்தி, தனி பில், துணைக்கு ஒரு பெரிய வீட் காலெண்டர். எழுந்து நின்று இரு கரங்களாலும் சமர்ப்பணம்.

"ஐயா! வாங்க. ஐயா வந்துக்கிட்டே இருக்கணும். இத்தனை நாளைக்கு இன்னிக்குத்தான் கடையை மிதிச்சிருக்கீங்க-” மறுபடியும் கண்களில் ஏதோ ஸான்னித்ய பயம்