பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

31


அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “அப்பிடின்னா?”.

அவர் தோள்கள் தூக்கித் தாழ்ந்தன. காத்திருந்தாள் பதில் வரவில்லை. வருவதாயில்லை.

“உங்கள் மூணு பேர் மாதிரி ஒரு ஜோடிபார்க்க முடியாது சார். எல்லாரும் சிவப்பு, எல்லாரும் அழகு.”

“மூணு பேர் ஒரு ஜோடியாக்கும்! இது புது கணிதம் ஆக்கும்!”

மறுபடியும் சிரிப்பு. பீங்கான் சிதர்கள். ஆனால் காபி கோப்பைகளும் சாஸர்களும் - ஒரு சாஸர் அதிகப்படி - அதில் பில்லுடன் - எதிரே பத்திரமாய்த் தானிருந்தன. இரண்டு பேருக்கும் சொந்த விஷயங்கள் எல்லைக்கப்பால். ஆனால் நெடு நாளைய இடைவேளைக்குப் பின், சந்திப்பின் உணர்ச்சிப் பிழம்பில், இந்த தவிப்பு பேசவும் விட மாட்டேன்கிறது, விட்டுப் பிரியவும் முடியவில்லை.

ஸர்வர் ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுத் தலையையிழுத்துக் கொண்டான். பில் கொடுத்து எத்தனை நேரமாச்சு? வெறும் காப்பிக்கா இத்தனை நேரம்? சாவு கிராக்கிங்க."

“கோமதி, ஸர்வர் முறைக்கிறான்.”

“முறைக்கட்டும். ஸார். ஆத்துக்கு நிச்சயம். வருவேளா? வரணும்.”

புன்னகை புரிந்தார். “உனக்கென்ன சந்தேகம்?"

"அதுக்கில்லே சார் . இப்போ சொன்னால் எங்கே நம்பப் போகிறீர்கள்? இரண்டு மூணு நாளா உங்கள் முகம் சம்பந்தமில்லாத இடங்களில், வேளைகளில், உங்கள் முகம் மட்டும் - பட்டுப் போல் அந்த வெள்ளை கிராப் - அந்த மேட்டு நெற்றி - தோணும். அதனால் உங்களை இன்னிக்குப் பார்த்ததும் எனக்கு ஷாக்-”