பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

கல் சிரிக்கிறது


அவர் தன்னிடத்துக்குப் போய் உட்கார்ந்து கொண்டார் ஒரு கால் மடித்து, மறுகாலைக் குத்திட்டு, குத்திட்ட காலின் முட்டி மேல், யோக தண்டம் போல் ஒரு கையும் மறு கையைத் தரையிலும் ஊன்றிக் கொண்டு, மணி தூணின் செதுக்கலின் மேல் தலை சாய்ந்தார். கோவில் வாசலில் கிணற்றிலிருந்து ஒன்றிரண்டு பெண்கள் தண்ணிர் சேந்திக் கொண்டு சென்றனர். மதில் மாடப்பிறைகளில் புறாக்கள் கொஞ்சின. வெய்யிலில் பொன் ஏறிக் கொண்டிருந்தது. மணி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். மண்டகப்படிக்காரன் இன்னும் காணோம். இந்தப் பெரிய மனுஷன்களே இப்படித்தான். எந்தப் பக்கமும் போக விட மாட்டான்கள். கழுத்தறுப்பான்கள். 'அப்பா ! அப்பா!' குட்டி, அழுக்குத் துணி போர்த்த ஒரு பிட்டுக் கூடையுடன் காட்சியளித்தாள். புது முகத்தைப் பார்த்ததும், தன் முகத்தை முற்றலாக்கிக் கொண்டாள். இந்தக் காலத்தில் பிஞ்சே கிடையாது. எல்லாமும் வெம்பல்தான். 'உள்ளே கொண்டு போய் வை!' அப்படியே செய்துவிட்டு, அப்பாவிடம் காதண்டை கிசுகிசு... அவர் காது கேட்க - இது உன் பெரியப்பாடி!' உடனே அவள் விழுந்து பெரியப்பாவுக்கு நமஸ்கரித் தாள். வயது பத்து, பன்னிரண்டு. பெரியப்பா ஆசிர்வாதம் பண்ணிக் குழந்தையை எழுப்பி விட்டு, இடுப்பைத் துழாவி.