பக்கம்:களத்துமேடு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

109


நினைவில் அவளுக்கு ஓர் அமைதியும் ஏற்பட்டிருந்தது, 'இந்தத் தருணத்துக்கு ஆத்தா இருந்திருந்தாக்க, சிலட்டூர் மச்சான்காரக எண்ணைக்கோ எங்கழுத்திலே மஞ்சள் கயிற்றைக் கட்டியிருப்பாகளே, மேள தாளத்தோட!... ஆத்தா இல்லாப் பொட்டைக்கு அதிர்ஷ்டம் அரைமுழம் கட்டைன்னு சொல்லிக்கிடுறது எம்மாம் நெசமான சங்கதி!' என்றும் அவள் நினைத்தாள். வீடு வாசல் பெருக்கி, சாணம் எடுத்து எருக்குழியில் போட்டு, மாடுகளுக்குத் தீவனம் வைத்து, பால் கறந்து முடித்து விட்டு, மடத்துக் குளத்திலே போய் விழுந்து வரவேண்டுமென்று சுருக்காகத் திட்டம் புனைந்தாள். ஆக வேண்டிய கைவேலைகளையும் கவனிக்கத் தலைப்பட்டாள்.

அந்நேரத்தில், தன் அத்தை மகன் சிங்காரத்தைக் காணவில்லையே என்ற தவிப்பும் அவளுள் ஏற்பட்டது. பல வருஷங்களைத் தாண்டி அன்று தினம் அவனைக் கண்டதும் இனம் காண முடியாமல் தவித்த வேளையில், அவன் தவித்த தவிப்பையும் அவள் அவ்வளவு சுளுவாக மறந்து விடக் கூடவில்லை. "அடியோடவே நீ என்னை மறந்துப்புட்டியா, தைலி?" என்று கேட்டு, செய்வகை புரியாமல் பிரமை தட்டி நின்ற அப்போக்கையும் அவள் இத்தோடு எத்தனையோ தக்கம் எண்ணிவிட்டானே? "நீங்க எங்க மீனாச்சி அயித்தைமவன் சிங்காரம்தானே?" என்று தான் ஒய்யாரப்பாவனை ஒயில் கூட்டிக் கேட்டதும், அவன் அப்படியே மெய்ம்மறந்து நின்ற அக்காட்சியும் அவள் மறந்து விடக் கூடியதா, என்ன?

நினைவின் மன நிழலில் ஒண்டியவளுக்கு, வெய்யிலின் சுள்ளாப்பு உறைக்க வில்லை. பாவம் அயித்தைமகன்!... அவுக ரொம்ப ஏமாந்து போயிருப்பாங்க!... அதுக்கு அட்டியில்லே!.... என்னைச் சிலட்டூர் மச்சான்காரக கொண்டுகப்போற விசயம் அவுகளுக்குத் தெரிஞ்சுருக்கும் கட்டாயம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/116&oldid=1386368" இலிருந்து மீள்விக்கப்பட்டது