பக்கம்:களத்துமேடு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

161


இல்லே. உண்ணுற சோறு வாய்க்குக் கசக்குது; அப்படியே ரெண்டு பருக்கை உண்ணாலும், அதுவும் உடம்பிலே ஒட்ட மாட்டேங்குது! நீயே நாலுநாள் முந்தி கேட்டே, என்னடி, உன் உடம்பு இப்பிடி மெலிஞ்சிருச்சேன்னு! இப்படிப்பட்ட நிலவரத்திலே நீ என்னைக் கேலி பண்ணுறே கேலி!... ஊம்! - வரவர, தைலம்மையின் குரல் சுருதி இறங்கி வந்தது. கடை விழிகளில் முத்துக்கள் உருக்காட்டின.

தோழியின் கண்களிலே கண்ணீரைத் தரிசித்ததும் பொன்னாயிக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. "தைலி, நானு சும்மா விளையாட்டுக்குப் பேசப் போய், உன் மனசான மனசு இப்பிடி தளும்புமின்னு துளிகூட நெனைக்கல்லே!... என் கேலியைப் பொறுத்துக்கிடு!... உங்கஷ்டம் எனக்கு இல்லையா? உம்மனசு நிலவரம் எனக்குப் புரியாதா? நீ உனக்குள்ளவே ஒரு போராட்டம் நடத்திக்கிணு இருக்கிறே! இதுவும் எனக்கு அத்துபடிதான். ஆனா, நீ சாமான்யமான பொண்ணு இல்லேயிங்கிற ரகசியம் எனக்குத்தான் தெள்ளத் தெளிவாத் தெரியும். உனக்கின்னு ஒரு சொந்த முடிவை நீ வச்சிருப்பே என்கிறதும் எனக்குத் தெரியும்! எப்படியோ, நீயும் எங்களை மாதிரி குடியும் குடித்தனமுமா ஆகி, உன் வூட்டிலேயும் நல்ல விளக்கு ஏத்தி வைச்சுடு. அதான் என் இஷ்டமெல்லாம்!..... என் பேச்சைப் பெரிசுபடுத்தி மனசிலே பூட்டி வச்சுக்கிடாதே, தைலி!" என்று அழாத குறையாகக் கெஞ்சினாள் பொன்னாயி, அவள் கண்களும் நீருபூத்தன.

கண்ணீருக்குக் கண்ணீர் துணை ஆயிற்று.

"நல்லது. நீ போ. வெயில் பொரி பறக்குது. பதம் தப்பாமல் அள்ளு போ!" என்றாள் தைலி.

பொன்னாயி நெல்லில் ஒரு குத்து எடுத்துக் காலில் மிதித்து அரிசிகளை எடுத்து வாயில் போட்டுப் பதம் பார்த்தாள். பரக்கப்பரக்க நெல்லைக் குவித்து அள்ளத்தலைப்பட்டாள்.

க மே . — 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/168&oldid=1386155" இலிருந்து மீள்விக்கப்பட்டது