பக்கம்:களத்துமேடு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

65


பச்சை வண்ணமும் பொன் ரேக்கும் கொழித்துத் திகழ்ந்த சோளக் கதிர்கொண்டைகளின் அழகுக் கோலத்தை ரசித்தபடி அவள் வழி தொடர்ந்தாள். பாத்தி கட்டிக் காபந்து செய்யப்பட்டிருந்த மிளகாய்க் கன்றுகள் எவ்வளவு அந்த முடன் திகழ்ந்தன! ஒட்டுச் செடிகள் பூத்துக் குலுங்கிய தாய்மையின் கம்பீரக் கவர்ச்சியைத்தான் அவள் மறக்க முடியுமா? இயற்கைத் தாய் புவனத்துக்குத் தந்துள்ள சீதனங்களின் மகிமையை எண்ணி வியந்துகொண்டே அவள் கிணற்றடியைத் தொட்டாள். உள்ளத்தைத் தொட்ட நிகழ்வுகளின் ஆறுதலுடன் அவள் குடத்தைக் கீழே இறக்கி வைத்தாள். வாளியில் கயிற்றைக் கட்டினாள். கடகாலில் செம்பாதி தண்ணீர்தான் வந்தது. மூச்சு இறைத்தது. வேர்வை கொட்டிற்று. நீர் நிரம்பியது. குடத்தின் மேல் வரம்பைச் சோற்றுக்கையினால் தளும்பாமல் லேசாக வழித்து மட்டப்படுத்தினாள். ‘இன்னிக்கி போனதும் எங்க தோட்டத்துப் பாத்திகளுக்கு பத்து சால் தண்ணி இறைச்சு ஊத்தனும். சீமைத் தக்காளியும் அநேகமா நாளைக்கு மைக்காநாளு கண்பார்த்திபுடும். சோளத்துக்கு இனி பயமில்லை..........’ என்று நினைவுகளை ஒரே நாளில் தொடுத்த மலராக்கி, அம்மலர்களின் சுகந்தத் தெளிவில் மனம் தெளிந்து, அதே பாவனையின் பரவலான நெகிழ்ச்சியுடன் குடத்தை அலக்காகத் தூக்கித் ‘தலைச் சிம்மாட்டில்’ வைத்தபோது, எதிர்ப்பட்டாள் வடக்குத்தெரு அங்காளம்மை. பல்லை இளித்துக் கொண்டு ‘தங்கச்சியோ’ என்று சொந்தம் காட்டினாள். தைலம்மைக்குத் தன் பற்களை இளிப்பதில் என்றுமே கூச்சம் அதிகம். மேலும், அவளது பற்களின் எழிலை அனுபவிக்க வேண்டியவன் அனுபவிக்க வேண்டுமென்கிற தத்துவம் கொண்டவள் அவள்.

‘ஊம்’ கொட்டிவிட்டு, பேச்சாடாமல் வழிவிலக்கி , தடம் பிரிந்து நடக்கத் திட்டம் புனைந்தாள் தைலம்மை.
கள 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/72&oldid=1386167" இலிருந்து மீள்விக்கப்பட்டது