பக்கம்:களத்துமேடு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

களத்து மேடு

அதற்குமேல் தைலம்மைக்கு மூளை வேலைசெய்ய ஒப்பவில்லை. "ரொம்ப சந்தோசம் தங்கச்சி, அயித்தை மவன் இப்ப எங்கண இருக்காக?" என்று விசாரித்தாள்.

"அவுக ராத்திரி எங்கவூட்டிலேதானே தூங்கினாக!" என்று சம்பந்தமில்லாமல், எந்தப் பேச்சை எப்படி வெளியிடுவது என்று இங்கிதப்பண்பு புலனாகாமல் செப்பினாள். பிறகு "இப்ப சிலட்டூர் பக்கம் போயிருப்பாக!" என்று கேட்ட கேள்விக்கு உரிய விடையையும் வைத்தாள்.

அது தருணம், தன் அத்தை மகன் சிங்காரத்திற்குப் பிறந்த மண் உரிமை சிலட்டூரில்தான் இருந்தது என்பதையும் அவள் ஆராய்ந்து தீர்மானிக்கவும் செய்தாள். இப்போது அவளுக்கு ஒரு வகைப்பட்ட நிம்மதி கனியத்தொடங்கியது. 'ஆத்தா, எஞ் சொப்பனத்தைக் காடுமாத்திப்புடாதே, தாயே' என்று நெஞ்சம் நெக்குருகப் பிரார்த்தித்து 'வேண்டுதலை' விடுத்தாள். பின்னர், தன் தங்கச்சியிடம் சொல்லிக் கொண்டு, வீட்டைக் குறிவைத்து எட்டி நடைபோடத் தொடங்கினாள். குறுக்கே மறித்து ஓட்டம்பிடித்தப் பொவி எருதை விட்டு விலகித் தப்பித்தது தம்பிரான் புண்ணியத் தான் போலும்!

கால் மெட்டிகளின் இனிய பண், அவளது காதுகளின் ரசிகத் தன்மைக்கு விருந்து வைத்திருக்க வேண்டும்.

கொல்லை-குடிக்காடுகள் அவளுக்கு வழிவிட்டன.



தைலம்மை வீட்டுவாசலை அடைந்தாள்.

அங்கே. நாலைந்து பேர்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். 'கேதக்கார வீடு' போல அப்பொழுது அவ்வீடு தென்பட்டது. அவ்வாறு தான் அவளுடைய உள்மனமும் எண்ணம் தொடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/75&oldid=1386468" இலிருந்து மீள்விக்கப்பட்டது