பக்கம்:களத்துமேடு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

களத்து மேடு

விரிந்து நின்ற புளியமரங்களின் கட்டுக்கோப்பான நிழல் படர்ந்த அந்தக் களத்துமேட்டில் கம்பங் கூத்தாடியைச் சுற்றி நிற்கும் ஜனங்களைப் போல அவ்வளவு கூட்டம் கூடி நின்றது.

“ஐயோ! அப்பன்காரகளே!.......” என்று அலறிப் புடைத்தவளாக, தான் வடித்த செங்குருதித்திவலைகளைத் தானே மிதித்து அழித்தவளாக, கண்ணீருடன் அப்படியே ஒடிப்போய், கூட்டத்தின் தட்ட நடுவில் விழுந்தாள் தைலம்மை.

ஊர்க்குடியிருப்பு ‘முச்சூடும்’ அங்கே கூடிவிட்டது.

அலஞ்சிரான்காடு கணக்கண் விடுதிக்காரர்களும் கும்பல் கூடினர்.

களத்துமேடு திமிலோகப் பட்டது.

“அப்பாரே!” என்று கூக்குரலிட்டாள். தலையை உயர்த்தினாள்.

மறுகணம் அவள் ‘ஐயையோ!’ என்று நெஞ்சடைப்பு வந்தவள் போலக் குரல் தடுமாறினாள். நீண்ட அவளது கைகள், நீண்டிருந்த செங்காளியப்பன் சேர்வைகாரரின் காற்பாதங்களைத் தொட்டுத் தடவின. “ஐயோ தெய்வமே!...” என்று ஓலமிட்டாள்.

சேர்வைகாரர் பூக்கள் சிதறிய அந்தம்மிகுந்த ரோஜப்பூ மாலையைப்போலத் தரையில் சாய்ந்து கிடந்தார்.

அவள் கிறுக்குப் பிடித்தவள் போன்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

விலகி நின்றார் அழகிரி அம்பலம்—தொண்டுக்கிழம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/79&oldid=1386326" இலிருந்து மீள்விக்கப்பட்டது