பக்கம்:களத்துமேடு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

களத்து மேடு

"நானு செலடூர் மருமகப் பொண்ணாகப் போறனே, அக்கா" என்று குதித்துக் கும்மாளமிட்டாளே பூங்காவனம்!...அவளாவது தன் பெரியப்பனின் உடல் நலம்காணவந்து போகக்கூடாதா? அப்பன் ஒரு தடத்தில் போனால் அதே தடம்தான் மகளுக்கும் சொந்தமா?

செங்காளியப்பன் இருட்டை அளந்துகொண்டிருந்தார். அயர்வு முகத்தில் குடிகொண்டிருந்தது. மேலும் மேலும் சிந்தனை அவரது நெற்றிக்குச் சுருக்கங்களைக் கூட்டின. ஆனால் உடல்வலு ஒத்துழைப்புத் தந்தால்தானே! "ஆத்தா, ரவைப் பொழுது தலையைச் சாய்க்கிறேன்! மாப்பிள்ளையும் அக்கா மவனும் வந்தாக்க, என்னைத் தட்டு!" என்று சொல்லி, தலையைத் தரையில் சாய்த்தார். குறட்டை பீறிட்டது.


தைலம்மை அடுப்படியைச் சரணடைந்தாள்.

அவளைச் சரணடைந்தன காலத்தின் நினைவுகள்

காலத்தின் நினைவுகளைச் சரணடைந்தது விதி எனும் சக்தியின் உருத்தெரியா சிரிப்பு. அச்சிரிப்பின் அலைகள் அடங்கி முடியுமுன், சோற்றைக் கஞ்சிவடித்துக் கவிழ்த்துச் சோற்றுக் கலயத்தைக் கலவடையில் வைத்தாள். வெண்டிப் பிஞ்சுச் சாம்பாருக்கு சரக்குக் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைத்தாள். அகப்பையால் ஒருமுறை கிண்டினாள். இடது கை உள்ளங்கையில் துளி ஊற்றிப் 'பதம்' பார்த்தாள். நாக்கைச் சப்புக்கொட்டினாள். ஒரு பொட்டு உப்புக்கல்லைத் தூவினாள். கழுத்துப்பட்டையில் வேர்த்திருந்தது, துடைத்தாள். உசும்பி எழுந்தாள். வெளிக்கூடத்தைத் தாண்டினாள். தந்தையின் குறட்டை ஒலியை மிதித்தவாறு வெளித் திண்ணைக்கு வந்தாள். வந்தவளின் செவிகளில் பலத்த பேச்சுக் குரல்கள் பலமாகக் கேட்கத்தொடங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/93&oldid=1386227" இலிருந்து மீள்விக்கப்பட்டது