பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இணைப்பு-2


வச்சிரநந்தியின் திரமிள சங்கம்

மூன்று வகையான சங்கங்கள்

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் (கி.பி.470-ம் ஆண்டில்) மதுரை நகரத்தில் திரமிள (திராவிட தமிழ) சங்கத்தை வச்சிரநந்தி அமைத்தார் என்று அறிந்தோம். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளப்பதற்கான சங்கமாகும். (சங்கம்-கூட்டம்) பௌத்த பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர். பௌத்த பிக்குகளின் சங்கத்தலைவர் சங்கபாலர் என்று பெயர் கூறப்பெற்றார். பௌத்தர்களுடைய மும்மணிகளில் பௌத்த பிக்குகளின் சங்கமும் ஒன்று. ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்பது காண்க. இதன் பொருள் பௌத்த சங்கத்தைச் சரணம் அடைகிறேன் என்பது. சைனத் துறவிகளின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். சங்கத்தைச் (கூட்டத்தை) சைனர் ‘கணம்’ என்றும் கூறுவர். கணம் என்றாலும் சங்கம் என்றாலும் ஒன்றே. களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க்கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச்சார்பான சங்கம் அன்று, அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம். அந்தச் சங்கத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் ஆராயப்பட்டது. சங்கப்புலவர்கள் முக்கியமாக அகத்தையும் (காதலையும்) புறத்தையும் (போர் அல்லது வீரத்தையும்) ஆராய்ந்து செய்யுட்களை இயற்றினார்கள்.

சைன சங்கம்

சைன சமயத்திலே பழங்காலத்தில் சைனத் துறவிகளின் கூட்டம் பெரிதாக இருத்தது. சைனத் துறவிகளின் சங்கத்தை அக்காலத்தில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தார்கள். அந்தப் பிரிவுகளுக்கு நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர். ஒவ்வொரு கணத்திலும் கச்சை என்றும் அன்வயம் என்றும் உட்பிரிவுகள் இருந்தன. இந்த நான்கு கணங்களிலே நந்திகணம் பேர் போனது. வச்சிரநந்தி ஆசாரியர் நந்திகணத்தை இரண்டாகப் பிரித்தார். புதிய பிரிவுக்குத் திராவிடகணம் (தமிழ சங்கம்) என்று பெயர் இட்டு அதனை மதுரையில் அமைத்து நிறுவினார். இது கி.பி. 470 ல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. இதுதான் வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கம். இந்தத் திரமிள சங்கத்தில் சைன சமயத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். இவர்களுடைய வேலை, முன்னமே சொல்லியது போல சைன