பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

பற்றி வெளிப்படையாகவோ மறை முகமாகவோ சான்றுகள் இல்லையானாலும் உரையாசிரியர்கள் உரையில் சான்று காட்டினார்கள். ஆனால் அந்த உரை ஏட்டில் எழுதப்படாமல் பத்துத் தலைமுறை வரையில் மந்திரம் போல மறைபொருளாகவே வைக்கப்பட்ட ஆசிரிய மாணவர் பரம்பரையாகச் செவி வழியாக வந்தது. இதற்குள்ளாகப் புலவர்கள் களவியல் துறையமைத்துப் பாடல்களை இயற்றினார்கள். களவியல் துறையமைந்த பக்தித் தோத்திரப் பாடல்கள் வெளிவந்து வழக்கத்தில் ஒன்றினபிறகு களவியல் நூலையும் அதன் உரையையும் எழுதினார்கள். அதாவது கி.பி. 8-ம் நூற்றாண்டில், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப்பாடல்கள் தோன்றிய பிறகுதான் இந்நூலையும் உரையையும் ஏட்டில் எழுதினார்கள்.

பத்தாவது தலைமுறையில் வந்த முசிறியாசிரியர் நீலகண்டனார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் ஏட்டில் எழுதி வெளியிட்டார். அந்த உரையின் இடையிடையே மாறவர்மன் பராங்குசன் என்னும் பாண்டியன்மேல் பாடப்பட்ட ‘பாண்டிக் கோவை’ செய்யுட்கள் (ஏறத்தாழ 350 செய்யுட்கள்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மாறவர்மன் பராங்குசன் கி.பி.770-ல் பாண்டி நாட்டை யரசாண்டான். எனவே கி.பி. 8-ம் நூற்றாண்டில் இவன் இருந்தான் என்பது தெரிகிறது. இவனுக்கு முன் பத்துத் தலைமுறைக்கு முன்பு இறையனார் களவியல் உண்டாயிற்று என்று கூறப்படுவதால், தலை முறையொன்றுக்கு 30 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 30 x 10 = 300 ஆண்டுகள் ஆகின்றன. எனவே கி.பி.8-ம் நூற்றாண்டுக்கு 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி. 5-ம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் எழுதப்பட்டன என்பது தெரிகிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் தமிழகத்தைக் களப்பிர அரசர்கள் அரசாண்டார்கள். களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி.2-ம் நூற்றாண்டில் கடைச்சங்க காலத்தில் நக்கீரர் வாழ்ந்திருந்தார். அந்த நக்கீரர் இறையனார் களவியலுக்கு உரை கண்டிருக்க முடியாது. கி.பி. 2-ம் நூற்றாண்டில் இருந்தவர் கி.பி.3- ம் நூற்றாண்டில் எப்படி இருக்கமுடியும்? ஆனால் இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் சங்ககாலத்து நக்கீரர் இந்நூலுக்கு உரை கண்டார் என்றும் அவ்வுரையைக் கேட்டவர் காரணிகள் உருத்திரசன்மன் என்றும் கூறுகிறது!

நக்கீரர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் இருந்தவர். இந்த நெடுஞ்செழியன் காலத்துக்குப் பிறகு பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இருந்தான். இந்தப் பாண்டியன் அகநானூற்றைத் (நெடுந்தொகையை) தொகுப்பித்தான். தொகுத்தவர் உருத்திரசன்மன். இவர்கள் எல்லாரும் கி.பி.250 -க்கு முன்பு இருந்தவர்கள். நக்கீரர் உருத்திரசன்மனுக்கு முன்பு இருந்தவர். உருத்திரசன்மன், இறையனார் அகப்பொருளுக்கு உரை கேட்டார் என்றும் நக்கீரர் உரை கூறினார் என்றும் களவியல் உரைப்பாயிரம் கூறுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. உருத்திரசன்மருக்கு, முன்பே நக்கீரர் காலமாய் விட்டார். நக்கீரர், உருத்திரசன்மர், உக்கிரப் பெருவழுதி ஆகியோர் ஒரே காலத்தில்