பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவுரை

றையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுகிற முரண்பட்ட செய்திகள், விழிப்புடன் படிக்கிறவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்பதைக் கண்டோம். இதன் காரணத்தை விளக்குவோம்.

களப்பிரர் காலத்துக்கு முன்பு, சங்ககாலத்தில் அகப்பொருள் புறப்பொருள் என்று இரண்டு கொள்கைகள் நாட்டிலும் ஏட்டிலும் இருந்தன. இவைப்பற்றிப் புலவர்கள் பாடிய செய்யுட்கள் தற்காலமாக இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றிக்கு இலக்கனமாக இருந்தது தொல்காப்பியம் (தொல். பொருளதிகாரம்- புறப்பொருளியல், அகப்பொருளியல்)

சங்ககாலத்துக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் முத்தமிழை ஆராய்வதற்காகப் பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கம் கலைந்து விட்டது. பௌத்த சைன சமயங்கள் களப்பிரர் காலத்தில், முன்னைவிடச் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுவளர்ந்தன. அப்போது புறப்பொருளைப் பற்றிய புதிய கருத்துச் செல்வாக்கடைந்தது. அதாவது போரில் புறப்பகைவரை வென்று வெற்றி பெறுவதை விட, அகப்பகையான மனமாசுகளையும் ஐம்புலன்களையும் அடக்கி பெருகின்ற வெற்றியே சிறந்த வெற்றியென்னும் சைன பௌத்த மதக்கொள்கை பரவிற்று (அகப்பகையை வென்று வீரராக விளங்கிய புத்த பெருமானுக்கும் அருகக்கடவுளுக்கும் ஜீனன் - வெற்றி கொண்டவன் என்று பெயர் உண்டு) புலன்களையும் மனத்தையும் அடக்கி அகப்பகையை வெல்லும் கொள்கை சைனருக்கும் பௌத்தருக்கும் புதியவையன்று இக்கொள்கை அவர்களுக்குப் பழமையானது. ஆனால், அந்தக் கொள்கை சங்ககாலத்தில் தமிழகத்தில் சிறப்புப் பெறவில்லை. புற வெற்றியே- போர்க்கள வெற்றியே பெரிதும் போற்றப்பட்டது.

களப்பிரர் ஆட்சிக் காலத்தில், சைன பௌத்த சமயங்கள் சிறப்பும் செல்வாக்கும் பெற்ற காலத்தில், அகப்பகையை வென்று வீரனாகும் சமயக்கொள்கை வலுப்பெற்றுப் பரவிற்று. இது புறப் பொருளுக்குப் புதிதாக ஏற்பட்ட புது மாற்றம் ஆகும். அந்தக் காலத்திலே சைவ-வைணவ சமயங்கள் சமயப் பிரசாரத்துக்காகப் பக்திக் கொள்கையைப் புத்தம் புதிதாக உண்டாக்கின. இக்கொள்கைக்கு ஆதரவாக அகப்பொருளில் புதிய கொள்கையைப் புகுத்தினார்கள். புறப்பகையை வென்று வெற்றி வீரனாகத் திகழ்வதைவிட அகப்பகையை வென்று வீரனாவதே சிறந்தது என்று சைனரும் பௌத்தரும் புறப்பொருளுக்குப் புதிய கருத்துக் கூறியது போல, சைவரும் வைணவரும் உலகியல் அகப்பொருள் பற்றிச் சிற்றின்பக் காதலைப் பாடுவதை விடக் கடவுளுக்கும் பக்தருக்கும் உள்ள தெய்வீகக் காதலைப் (பேரின்பக் காதலை) பாடுவது சிறந்தது என்று அகப்பொருளுக்குப் புதிய பொருள் கற்பித்தார்கள். அதாவது கடவுளைக் காதலனாகவும் (தலைமகனாகவும்] பக்தர்களைக் காதலியாகவும்