பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

இங்கு, நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய களப்பிரர் காலத்தில் கொடும்பாளுரையாண்ட இருக்குவேள் அரசரைப் பற்றிக் கூறுவோம். முதலாமவனாகிய இருக்குவேளின் பெயர் சாசனக் கல்லில் மறைந்து போய் விட்டபடியால், அவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் களப்பிர அரசனுக்கு அடங்கிக் கொடும்பாளுரை அரசாண்டான். களப்பிரருக்கு அடங்கியிருந்த பாண்டியர் அடிக்கடி மேலெழுந்து களப்பிர அரசனுடன் போர் செய்து சுதந்திரம் பெற முயன்றனர் என்று தெரிகிறது. அவ்வாறு பாண்டியர் களப்பிரரோடு செய்த போர் ஒன்றில், களப்பிரர் சார்பாக இந்த இருக்குவேள் அரசன் பாண்டியனோடு போர் செய்து பாண்டியரின் யானைப்படையை வென்றான் என்று தெரிகிறது. இவனைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

இவனுக்குப் பிறகு ஆண்ட பரவீர ஜித்து என்பவன் பகைவரான வீரர்களைப் போரில் வென்றவன் என்று அவனுடைய பெயரில் தெரிகிறது. அவனுக்குப் பிறகு ஆண்ட வீரதுங்கனும் அவனுக்குப் பிறகு ஆண்ட அதிவீரனும் போரில் வல்லவர்கள் என்பதை அவர்களுடைய பெயரிலிருந்து அறிகிறோம். இவர்களுக்குச் பிறகு அரசாண்டவன் இருக்குவேள் அநுபமன் என்பவன், இவனுக்குச் சங்ககிருத்து (சங்கத்தைச் செய்தவன்) என்று சிறப்புப் பெயர் இருந்தது. இதனால் இவன் சைன சங்கத்தை ஆதரித்தவன் என்று தோன்றுகிறான். மலையத் துவஜன் என்னும் ஜைன முனிவர் தேனிமலைக் குகையில் (தேனூர் மலைக்குகையில்) தவஞ் செய்து கொண்டிருந்தார். கொடும்பாளூர் இருக்குவேள் அரசன் இந்த முனிவரைக் கண்டு வணங்கி இவருக்கு நிலத்தைத் தானஞ்செய்தான் என்று இங்குள்ள சாசனம் கூறுகிறது.[1] இந்தக்கல் வெட்டெழுத்து இந்தக் குகைக்கு எதிரில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது. அதன் வாசகம் இது:

"ஸ்வஸ்தி ஸ்ரீ மலையத் துவஜன் தேனூர் மலையில் தவஞ்
செய்யக் கண்டு இருக்குவேள் வந்தித்து அவிப்புறஞ் செய்த
பள்ளிச் சந்தத் தாலே கால், இவ்வறக் காத்தான் அடி
நித்தஞ் சென்னி. அன."

இந்தக் கல்வெட்டில் தானஞ்செய்த அரசன் பெயர் இருக்கு வேள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் சொந்தப் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் இந்த இருக்குவேள் அனுபமன் என்று கருதப்படுகிறான். இவனுடைய சங்ககிருத்து (ஜைன சங்கத்தைச் செய்தவன், ஆதரித்தவன்) என்ற சிறப்புப் பெயர் இதை உறுதி செய்கிறது. இவனுடைய ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் (இறுதியில்) சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காஞ்சியிலிருந்து படையெடுத்து வந்து களப்பிர அரசனோடு போர் செய்து வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான். அப்போது இந்த இருக்குவேள் (முன்பு களப்பிரரைச் சார்ந்திருந்தவன் பிறகு ) சிம்மவிஷ்ணுவுக்குக் கீழடங்கிப் பல்லவரைச் சார்ந்து இருந்தான் என்று தோன்றுகிறான்.


  1. புதுக்கோட்டைச் சாசனங்கள் எண்.9