பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

என்றும்

பூழியர் தமிழ்தாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள் எல்லாம்
பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடை மயிறபீலி யோடு
மூழிநீர் கையிற்பற்றி அமணரே யால் மொய்ப்ப[1]

என்றும்

பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியு முக்குடையுமாகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச்சைவ
நெறியினில் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங்காலை [2]

என்றும் சேக்கிழார் கூறுகிறார். இது களப்பிரர் வீழ்ச்சிக் காலத்துக்குப் பின் கி.பி.7-ம் நூற்றாண்டில் சமயங்கள் இருந்த நிலை. இந்தநிலை களப்பிரர் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்தது.

மதுரையை யாண்ட களப்பிரர் அரசன் ஒருவன் சிவன் கோவில்களில் வழிபாடு செம்மையாக நடக்காதபடி தடை செய்தான். சிவன் கோவிலில் சந்தனக் காப்பு வழிபாடு நடக்காத படி தடைசெய்தான்.[3] அவன் சடையள் (சிவன்) அடியாரை வன்மை செய்தான்.

மடக்குகைகளிலே சமண (ஜைன) சமயத்து முனிவர்கள் தங்கித் தவஞ் செய்தார்கள். அவர்கள் பாண்டிய நாட்டிலே எட்டுக் குன்றுகளில் இருந்தனர். அந்த மலைகளை 'எண்பெருங் குன்றம்' என்றும், அங்கிருந்து தவஞ்செய்தவர்களை 'எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்' என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்.[4] ' ஆனைமாமலை ஆதியாய இடங்களில்' ஜைனமுனிவர் இருந்ததைத் திருஞானசம்பந்தர் கூறுகிறார்.[5] 'எண்பெருங் குன்றத்து எண்ணாயிரம் சமணர்' என்று கூறுவதன் பொருள் மலை யொன்றுக்கு ஆயிரம் பேராக எட்டுமலைகளில் எட்டாயிரம் சமணர் என்று கருதக் கூடாது. ஆயிரம் என்பது இங்குப் பெருந்தொகையைக் குறிக்கிறது.

ஆனைமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணர்மலை கழுகுமலை, சித்தன்னவாசல், கொங்கர் புளியங்குளம், கீழைவளவு, முத்துப்பட்டி, நாகமலை (விக்கிரம மங்கலம்), சித்தர்மலை, விருச்சியூர், மருகால்தலை முதலாள மலைக்குன்றுகளில் ஜைனத்துறவிகள் தங்கித் தவஞ்செய்ததற்கு அடையாளமாக இன்றும் அங்கெல்லாம் ஜைனத் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் வட்டெழுத்துச் சாசனங்களும்


  1. திருஞான சமபந்த நாயனார் புராணம் 601. (பூமியர் தமிழ்நாடு பாண்டி நாடு; பாழி குகை; அருகா ஜைனர்)
  2. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 602
  3. மூர்த்தி நாயனார் புராணம் 17
  4. திருஞானசம்பந்த நாயனார் புராணம் 631, 635
  5. திருவாவாயப் பதிகம்