பக்கம்:கழுமலப்போர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

தோல்வியுற்றது அவன் படை என்பதனாலேயே அவன் பணிந்து போக வேண்டும் என்பது வேண்டியதில்லை. சிறிது காலம் கழியின், வந்தவனை அவனால் வென்று ஓட்டுவதும் இயலும். அதற்குள் அவன் போரிடற்கு ஏற்ற காலமும் வந்து வாய்க்கும். அவனோடு நட்புடைய அரசர் சிலர், அவனுக்குப் படைத்துணை அளிப்பதும் செய்வர். ஆகவே, அக்காலத்தை எதிர் நோக்கும் அவன், அதுவரை பகைவனுக்குப் பணியாமலும், அவனால் அழிவுறாமலும் தன்னையும் தன் படையையும் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அதுவே, தலையாய போர் முறையாம். ஆகவே, அவன், அவன் நாட்டில் தக்கதோர் இடத்தில் அமைத்து வைத்திருக்கும் அரணுள் புகுந்து கொள்வன்.

மேலும், பகைத்துப் படையெடுத்து வந்திருக்கும் வேந்தன் தங்கியிருப்பது பகைவன் நாட்டில். அவனை ஆங்கு நெடிதுநாள் தங்கவைப்பின், அவன், தன் பெரும் படைக்குத் தேவையான உண்பொருள் முதலாயின பெற மாட்டாது வருந்த வேண்டி நேரிடும். அந்நிலை பெற்று அழிந்து போவதை விட, கருதி வந்த வெற்றியைக் கைவிட்டுப் போய் விடுதலும் கூடும். இதைக் கருதியும், தோற்ற அந்நாட்டு அரசன் அரணுள் புகுந்து வாழ்வது வழக்கம்.

நிலம் விட்டு நிலம் சென்று, நாடோடி வாழ்வினராய அலைந்திருந்த மக்கள், நிலைத்த வாழ்வினராகி, நிலத்தை உழுது பயன் கொள்ளத் தொடங்கிய காலத்தில், அவர்களிடையே செல்வமும் சேரத் தொடங்கிற்று. நிலத்தில் விளைந்த பொருள்களோடு அவற்றுள் தமக்கு வேண்டியன போக எஞ்சியவற்றை அவை கிடைக்காத நாட்டாருக்கு அளித்து ஆங்குக் கிடைக்கும், தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று வந்த வாணிக வாழ்வின் வழிவந்த பொருள்களும் அவர்பால் குவிந்தன. குவியவே, அவற்றைக் கேடின்றிக் காக்க வேண்டிய கருத்து உண்டாயிற்று. அந் நிலையிலேயே அரண் அமைக்கும் அறிவினை அவர்கள் பெற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/19&oldid=1360718" இலிருந்து மீள்விக்கப்பட்டது