பக்கம்:கழுமலப்போர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

வென்று அடக்கி, அரசர்க்கு அரசனாய் வாழ ஆசை கொள்வதும், அவன் பெருமை கண்டு மனம் பொறுக்க மாட்டாத பிற இருகுலத்து அரசர்களும் ஒன்றுபட்டுக் குறுநிலத் தலைவர்களின் துணையையும் பெற்று, அவனோடு சமர் புரிந்து அவனை அழிக்க முனைவதும், அக்கால அரசியலின் அழிக்க முடியாத வழக்கங்களாகி விட்டன. அம்மட்டோ! ஒரு குலத்தவர், பிறகுலத்தவரோடு போரிட்ட நிலையோடு நின்றுவிடவில்லை. ஒரு குலத்தில் பிறந்தவர்களுக்குள்ளேயே, ஒருவர் ஒருவரோடு போரிட்டுக்கொள்ளவும், மகன் தந்தைமீது போருக்கு எழவும் தந்தை தான் பெற்ற மகனையே போரிட்டு அழிக்கவும் அக்காலத் தமிழரசர்கள் உரிமை பெற்றிருந்தனர். அவ்வுரிமையின் விளைவுகளில் ஒன்று இக்கழுமலப் போர்.

கழுமலப் போரில் கலந்துகொண்டவர்கள், சேரமான் கணைக்கால் இரும்பொறையும், சோழன் செங்கணானும் ஆவர். இருவரும் தமிழர் என மொழியால் ஒருவரேயாயினும், குலவழியால் வேறுபட்டவராவர். சேரமான் கணைக்கால் இரும்பொறை, சேரருள் ஒரு பிரிவினரால் இரும்பொறை மரபில் வந்தவனாவன், பரந்த சேரநாட்டைச், சேர வேந்தர்கள் இரு கிளையினராய்ப் பிரிந்து ஆண்டுவந்தனர். பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் வழிவந்த சேரர், வஞ்சிமா நகரைத் தலைநகராகக்கொண்ட சேர நாட்டு உட்பகுதியையும், அந்துவஞ்சேரல் இரும்பொறை வழி வந்தோர், தொண்டியைத் தலைநகராகக் கொண்ட சேர நாட்டுக் கடற்கரைப் பகுதியையும் ஆண்டு வந்தனர்.

தொண்டி, மாந்தை, நறவு போன்ற மாநகர்களை அரசியல் தலைநகர்களாகவும் வாணிக நிலையங்களாகவும் கொண்டு, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால், கடலை அடுத்திருந்த சேரநாட்டை ஆண்டிருந்த இரும்பொறை மரபினருள் சிறந்தவன் கணைக்கால் இரும்பொறை. இவன் கணையன் எனவும் கோதை எனவும் புலவர்களால் அழைக்கப்பெற்றுளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/25&oldid=1359340" இலிருந்து மீள்விக்கப்பட்டது