பக்கம்:கழுமலப்போர்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இரும்பொறை ஆண்ட நாடு, கடல் வளத்தோடு, வயல் வளமும், மலை வளமும் வாய்ந்திருந்தது. மலை நாட்டு மக்களாகிய குறவர், தங்கள் தினைப்புனத்தில் விளைந்து முற்றிய கதிர்களைத் தின்னவரும் பறவைகளை ஓட்ட, கிளிகடி கருவிகளைத் தட்டி ஒலி எழுப்பினால் செந்நெற் கதிர்கள் தலை சாய்ந்து ஆடும் வயல்களிலும், நீர் நிறைந்து வழியும் உப்பங்கழிகளும் இரை தேடி வாழும் பறவைகள், அவ்வொலி கேட்டு அஞ்சி, ஒருசேர எழுந்து பறந்து ஓடும். இவ்வாறு அந்நாடு, கடற் பகுதியையும், வயல் வெளிகளையும், மலைக் காட்டையும் ஒருங்கே பெற்றிருப்பதால், அந்நாடாளும் அவனைக் கடல் நாடாகிய நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும் சேர்ப்புன் என்றோ, வயல்கள் மலிந்த மருத நிலத் தலைவனைக் குறிக்கும் ஊரன் என்றோ, மலைவளம் மிக்க குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிக்கும் நாடன் என்றோ பெயரிட்டு அழைக்க முடியாமல் வருந்தியுள்ளார் அவன் அவைக் களப் புலவரும், அவன் ஆருயிர் நண்பரும் ஆகிய புலவர் பொய்கையார்.[1]

சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறந்த வீரனாவன்; அவன்பால் ஒரு பெரிய படையும் இருந்தது. வேற்படைப் பயிற்சி பெற்றிருந்த அப்படையை வென்று அழிப்பது எவ ராலும் ஆகாது; அப்படையோடு என்றும் பாசறைக்கண் வாழ்வதையே அவன் விரும்புவன். அப்பெரும் படையை அடக்கி ஏவல் கொள்ளத்தக்க உடல் வன்மையும் அவனிடம் பொருந்தியிருந்தது. ஒருநாள், அவன் யானைப் படையைச்


  1. “நாடன் என்கோ? ஊரன் என்கோ?
    பாடு இமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ?
    யாங்ஙனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
    புனவர் தட்டை புடைப்பின், அயலது
    இறங்கு கதிர் அலமரும் கழனியும்
    பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே.”

    –புறநானூறு : 49
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/26&oldid=1365132" இலிருந்து மீள்விக்கப்பட்டது