பக்கம்:கழுமலப்போர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

‘நாடன்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் இவன் நாடு சோணாடு என்பதையும், ‘செங்கண்மால்’, ‘செங்கண்சினமால்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் இவன் பெயர் செங்கணான் என்பதையும், ‘இயல்திண் தேர்ச்செம்பியன்’, ‘புனைகழல்கால் செம்பியன்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம், இவன் சிபி பிறந்த சோழர் குலத்தவன் என்பதயும், ‘அருமணிப்பூண் ஏந்து எழில் மார்பு இயல்திண் தேர்ச் செம்பியன்’, ‘அடர்பைம் பூண்சேய்,’ ‘பொன்னார மார்பின் புனை கழல்கால் செம்பியன்,’ ‘கண்ணார் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன்’ என்ற தொடர்களால் பெயரிட்டு அழைப்பதன் மூலம், மணியாரமும், மலர் மாலையும் விளங்கும் மலர்ந்த மார்பையும், வீரக்கழல் கட்டிய கால்களையும் உடைய இவன் அழகுத் திருவுருவின் நலம் இத்தகைத்து என்பதையும், ‘அதிராப் போர்ச் செங்கண்சினமால்’, ‘மடங்கா மறமொய்ம் பின் செங்கண் சினமால்’, ‘செருமொய்ம்பின் சேய்’ எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம், இவன் வீரம் இத்தகையத்து என்பதையும், முல்வேள் மனைமுழங்கு போர்த்தானைச் செங்கண்சினமால்', 'தடந்து இடம் கொள்வான், தளை அவிழும் தார்ச்சேய்' ’கொற்றவேல் தானைக் கொடித்திண்தேர்ச் செம்பியன்’, கொய்சுவல் மார்பின் கொடித்திண்தேர்ச் செம்பியன்' எனப் பெயரிட்டு அழைப்பதன் மூலம், இவன் வேற்படை, வாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகியவற்றின் கொற்றம் இத்தகைத்து என்பதையும், கொங்கரை அட்ட களத்து' எனவும், ’வஞ்சிக்கோ அட்ட களத்து' எனவும் கூறி, இவன் வென்றது கொங்கு நாட்டாராகிய சேரரையும் வஞ்சிமா நகரின் வேந்தனாகிய கணைக்கால் இரும்பொறையையும் ஆம் என்பதையும் அறிவிக்கின்றது.

சேக்கிழார் இயற்றிய, திருத்தொண்டர் புராணம் என்ற பெயர் பெற்ற பெரிய புராணம் இவன் வரலாறு தவித்துக் கூறுவது.

சோணாட்டில் காவிரியாற்றங்கரையில் ஒரு காடு இருந்தது. அக்காட்டில், ஒரு வெண் நாவல் மரத்தின் கீழ்ச் சிவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/30&oldid=1363682" இலிருந்து மீள்விக்கப்பட்டது