பக்கம்:கழுமலப்போர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அவன் அகப்பட்டிலன். இறுதியில், காவிரி கடலோடு கலக்குமிடமாகிய கழார் நகரில் வாழ்ந்திருந்த மருதி என்பவள், அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். ஆனால் அம்முயற்சியில், அவள் தன் உயிரை இழந்தாள். அவனுக்குரிய அத்தி என்ற பெயரையே இவனும் பூண்டிருந்தானாதலின், இவன் சேரர் இனத்தைச் சேர்ந்தவனாவன் என்பதே, அத்தி குறித்து அறியத் தக்கதாம்.

நன்னன் என்ற பெயர் நல்லோன் ஒருவனுக்குரிய பெயராகவும், தீயோன் ஒருவனுக்குரிய பெயராகவும் சங்க நூல்களில் வழங்கப்பெற்றுளது. தொண்டை நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களுள் பல்குன்றக் கோட்டம் என்ற பகுதியில், மலையிடை மாநகராகிய செங்கண்மா என்ற சிறந்த ஊரை அரசிருக்கையாகக் கொண்டு, வள்ளல் பெருந்தகையாய், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகன் என்ற பெயர் மிக்க புலவரால், மலைபடுகடாம் என்ற பாட்டில் வைத்துப் பாராட்டப் பெற்றவனான நன்னன் சேய் நன்னன் என்பான் ஒருவன். கொண்கான நாட்டில் வேளிர்க்குரிய விழுநிதி வைத்துக் காக்கப்பெற்று, அதனால் பற்பல போர்களுக்கு நிலைக்களமாகிவிட்ட பாழி என்ற அரண் மிக்க பேரூரில் வாழ்ந்து, தனக்குரிய மாவின் கனியைத் தின்றுவிட்டாள் என்பதற்காக, ஒரு கன்னிப் பெண்ணைக் கொன்று, அதனால் “பெண் கொலை புரிந்த நன்னன்” எனப், பெரும் புலவர் பரணரால் பழிக்கப்பட்டவனான நன்னன் வேண்மான் இரண்டாமவன். அவ்விருவர்க்குரிய நன்னன் என்ற பெயரையே இவனும் பெற்றிருந்தான். பின்னர்க் கூறிய நன்னன் வேண்மான், நன்னன் உதியன் எனவும் அழைக்கப்பெறுவான். உதியன் என்ற பெயர், சேரரைக் குறிக்கவரும் பெயர்களுள் ஒன்று. ஆகவே, அந்நன்னன் ஒரு வகையில் சேரர் இனத்தைச் சேர்ந்தவன் என்பது வெளிப்படுவதால், நன்னன் என்ற இச்சேரர் படைத் தலைவனும் சேரர் இனத்தைச் சேர்ந்தவனே என்பது ஒன்றே, நன்னனைக் குறித்து அறியத் தக்கதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/36&oldid=1359644" இலிருந்து மீள்விக்கப்பட்டது