பக்கம்:கழுமலப்போர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

பெற்றான்.[1] பசும்பூண் பாண்டியன் என்பானும் கொங்கரை வென்று அவர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளைத் தனதாக்கிக் கொண்டான்.[2] இம்முடியுடை வேந்தர்களே அல்லாமல், குறுநிலத் தலைவர்கள் சிலரும் அவரைப் பணியவைப்பதில் பேரார்வம் காட்டியுள்ளனர். ஆய் அண்டிரன் என்ற வேளிர் குலத்தவன், அக்கொங்கரைக் குடகடல்வரை ஒட்டி வெற்றி பெற்றான்.[3]

சோழன் செங்கணான் சோணாட்டு அரியணையில் அமர்ந்திருக்கும் காலத்திலும், கொங்கர் சோணாட்டுள் புகுந்து கொள்ளையிட்டனர். அதனால் அவரை அழிக்க வேண்டும் என்ற ஆர்வம், செங்கணான் உள்ளத்தில் உருப்பெற்றது. அந்நினைப்பு வரப்பெற்றதும், கொங்கரின் படைப் பெருமையையும், அவரை அதற்கு முன் வென்றுள்ள வேந்தர்கள், அவரை வெல்ல மேற்கொண்ட போர் முறைகளையும் எண்ணிப் பார்த்தான். வென்ற வேந்தர்கள், வேற்படையில் சிறந்து விளங்குவதை, அவர்களின் வெற்றியைப் பாராட்டிய புலவர்கள், அவர்களின் வேற்படைகளையும் புகழ்ந்திருப்பதால் உணர்ந்தான். உடனே, அவ்வேற்படையில் சிறந்தான் ஒருவனையே கொங்கரை அழிக்கும் தன் படைக்குத் தலைவனாக ஆக்குதல் வேண்டும் என்று துணிந்தான். அதனால் வேற்படையில் சிறந்த போரூர்த் தலைவன் பழையனைப் படைத் தலைவனாகக் கொண்டான்.[4]

  1. “கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!”

    —புறநானூறு : 373
  2. “கொங்கர் ஓட்டி
    நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்”

    —அகநானூறு : 253
  3. “கொங்கர்க்
    குடகடல் ஓட்டிய ஞான்றைத்
    தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே.”

    —புறநானூறு : 130
  4. “கொற்றச் சோழர் கொங்காப் பணீஇயர்
    வெண்கோட்டு யானைப் போலர் கிழவோன்
    பழையன் வேல்வாய்த்தன்ன” —நற்றிணை : 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/48&oldid=1359867" இலிருந்து மீள்விக்கப்பட்டது