பக்கம்:கழுமலப்போர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

முக்கோட்டுயானை :

சேரநாட்டு மன்னனை வென்று சிறைகொள்ள வேண்டுமாயின், அவன் கொண்டுவந்துள்ள வேழப் படையை வலி விழ்க்கப் பண்ணுதல் வேண்டும். ஆனால் அவ்வேழப் படையோ, எளிதில் அழிந்து போகக்கூடியதன்று. அதை வெற்றி கொள்வது வாட்படை வீரரால் இயலாது. வேழங்களை நெருங்கிய பின்னரல்லவோ வாள்கள் தொழிற்படும். வேழங்கள் தாம் வீரர் தம்மை அணுகுவதற்கு முன்பே தம் நீண்ட கைகளால் அவரை அழித்துவிடுகின்றனவே. அதனால் வாட்படை, வேழப் படையை வென்றழிக்கும் என எதிர்பார்த்தற்கு இடம் இல்லை, வில் வீரர் துணையால் வீழ்த்தலாம் எனிலோ, அதுவும் இயலாது. வீரர் ஏவ வில்லினின்றும் விரைந்து புறப்படும் அம்புகள், வேழங்களின் பருவுடலில், எங்கோ ஒரு பகுதியில் பாய்ந்துவிடுகின்றன. தம் உடம்பில் அம்பேறுண்டது என்ற உணர்வு தானும் வேழங்களுக்கு உண்டாவதாகத் தெரிந்திலது. ஆகவே வேழங்களை வில் வீரர் வென்று அழிக்கார். வேழங்களை அணுகுவதும் கூடாது வாள் வீச்சால் விளையும் விழுப் பண்போலும் பெரும் பெரும் புண்களை உண்டாக்குவதும் வேண்டும், வாள் வீரராலும், வில் வீரராலும் முடியாத அதை வேல் வீரர் முடிப்பார் என அறிந்தான் சோணாட்டு மன்னன். உடனே வேற்படை வேழப் படை முன் சென்று நின்றது.

வேழங்களை எதிர்த்து நின்ற வேல் வீரர்கள், பகைவர் அரணைப் பாழாக்கவல்ல திண்மை வேழங்களுக்கு அவற்றின் கோடுகளினால் உண்டாவதைக் கண்டனர். அவை, தம் கோடுகளால் அரணை முட்டி அழிப்பதைத் தடுக்க வேண்டு மேல், அக்கோடுகளைப் பயனிழக்கப் பண்ணுதல் வேண்டும். அவற்றைப் பயனிலவாக்க வேண்டுமேல், இரு கோடுகளுக்கு மிடையே, பருவேல் ஒன்றைப் பாய்ச்சுதல் வேண்டும். தந்தங்கள் அரண் மதிலைத் தாக்குவதன் முன், அவ்வேல் அம் மதிலைத் தாக்குதல் வேண்டும். அப்போது அது தைத்துப் பண்ணிய புண் பெரு நோய் அளிக்கும். அந்நோய் மிகுதியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/58&oldid=1359995" இலிருந்து மீள்விக்கப்பட்டது