பக்கம்:கழுமலப்போர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

குறையும் என்ற போர் நுணுக்கத்தை அறிந்திருந்தமையால் அவ்வீரர்கள் பகை வேந்தனின் நாற்படையுள், காலாட் படையைத் தேர்ந்து கடும் போரிட்டனர். வீரர்களின் வாள் பட்டு, பகைவரின் காலாட் படை வன்மை இழந்தது. தலை இழந்தும், தோள் இழந்தும், காலற்றும் கணக்கற்றோர் வீழ்ந்தனர். அறுபட்ட தலைகளும், துண்டிக்கப்பெற்ற தோள்களும், முடம்பட்ட கால்களும் களமெங்கும் காட்சி அளித்தன.

பார்க்குமிடமெங்கும் பிணமலைகளே காட்சி அளிக்கக் கண்ட பறவைக் கூட்டம், அக்களத்தைப், பல கூடி அடைந்து வான வீதியில் வட்டமிட்டுப் பறந்தன. அவற்றுள், பெரிய வலிய பருந்தொன்று, துணிந்து களம் புகுந்து ஆங்கு அறுபட்டு வீழ்ந்து கிடந்த கைகளுள் ஒன்னறக் கௌவியெழுந்து பறந்தோடிற்று, ஐவிரல்களோடும் கூடிய கையை வாயிற் கௌவிக் கொண்டவாறே விண்ணில் பறக்கும் பருந்தின் தோற்றம் தன் இனத்தின் பகையினத்தைச் சேர்ந்த ஐந்தலை நாகத்தைக் கொன்று, கொன்ற அவ்வெற்றிப் புகழ் விளங்க, அதைத் தன் கால் விரல்களுக்கிடையே பற்றி விண்ணிற் பறந்து திரியும் கருடன் காட்சியை நினைவூட்டக் கண்டு, களம்காண்பார், களத்தின் கொடுமையைச் சிறிதே மறந்து, மகிழவும் செய்தனர்.

“எவ்வாயும் ஓடி வயவர் துணித்திட்ட
கைவாயில் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகம் கவ்வி, விசும் இவரும்
செவ்வாய் உவணத்தில் தோன்றும், புனல்நாடன்
தெவ்வரை அட்டகளத்து.” —களவழி : 26

கையைக் கவ்வி ஓடும் குறுநரி :

சோணாட்டு வாட்படை வீரர்களின் தாக்கு தலைத் தாங்கமாட்டாது, சேர நாட்டு வீரர்கள் தளர்ந்தனர். சோணாட்டாரை வென்று துரத்துவது தம்மால் இயலாது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/64&oldid=1360418" இலிருந்து மீள்விக்கப்பட்டது