பக்கம்:கழுமலப்போர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கொண்டு காடு நோக்கி விரைந்தது. அக்காட்சி காணக் கூடாக் கொடுமையுடையதே யெனினும், கை, கேடகத்தைத் தூக்கிப் பிடிக்க, அக்கையைக் கௌவி ஓடும் நரி, அரசர் பெருங்கோயிலிலும், செல்வர் மாளிகைகளிலும், பெருங்குடி மகளிர் காணக் கையில் கண்ணாடியேந்தி விரையும் பணி மகளிர்போல் தோன்றக் களக் கொடுமையைச் சிறிதே குறைத்துக் காட்டிற்று.

“ஓடாமறவர் உருத்து மதம்செழுகிப்
பீடுடை வாளர் பிறங்கிய ஞாட்பினுள்
கேடகத்தோடு அற்ற தடக்கை கொண்டோடி
இகலன் வாய்த்துற்றிய தோற்றம் அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரிற் றோன்றும், புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து." —களவழி : 28

பவளத்தூள் பரந்தது :

போர், ஞாயிறு தோன்றுவதற்குமுன்பே தொடங்கி விட்டது. வீரர்களின் போர்வெறி, பொழுது புலரும் வரை பொறுத்திலது. இருள் எதிர் வருவாரை மறைக்குமே முன் வருவார் யாவர்? பகைவரோ அல்லது பரிவுகாட்டத்தக்க நண்பரோ என்பதை அறிதற்கும் வாய்ப்பில்லையே என எண்ணி வாளாக்கிடக்க மறுத்தனர்! போர்வாள் வீசும் பேரொளியே போதும். ஒன்னார் யார் உற்றார் யார் என்பதை அறிய எனத் துணிந்தார்போலும். வாளேந்திக் களம் புகுந்து விட்டனர்.

இருதிறப் படை வீரர்க்கு மிடையே வாட்போர் தொடங்கிவிட்டது. சேரநாட்டு வீரரின் வாளுக்குச் சோணாட்டு வீரர் பலர் இரையாயினர். அவ்வாறே சோழவீரரின் வாள்பட்டு சேர வீரர் பலர் உயிரிழந்து வீழ்ந்தனர். வாள், வீழ்ந்தாரை வறிதே வீழ்த்தவில்லை. அவை, அவர் உடலில் முழுதும் மறையுமாறு பல முறை ஆழமாகப் பதிந்து பதித்து, அவ்வுடல்களைச் சல்லடைக் கண்களெனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/66&oldid=1360432" இலிருந்து மீள்விக்கப்பட்டது