பக்கம்:கழுமலப்போர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

குதிரைகள் சிறந்தனவாய் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. அக்குதிரைகளைச் செலுத்தும் வீரரும், அவற்றைப் போரின் போக்கறிந்து செலுத்த வல்ல அறிவுடையராதல் வேண்டும். அவர்பால் அவ்வாற்றல் இல்லையேல், அக்குதிரைகளின் ஆற்றல் பயன் அற்றுப்போம் என்ற இப்போர் நுணுக்கங்களை அறிந்து அக்குதிரைகளின் விரைவினைத் தாங்கிக் கொண்டு, களத்தின் நிலைமையையும் கருத்தில் இருத்தி, கைப்படைகளைக் கையாளும் திறத்திலும் சிறந்த வீரர்களையே தேர்ந்து, அவர்கள்பால் அக்குதிரைகளை ஒப்படைத்திருந்தான்.

போர் தொடங்கிவிட்டது. மலைநாட்டு வேழப் படை, பாய்ந்து வரும் சோழப் படை ஒரு சிறிதும் மேல் நோக்கி வராதபடி, மலை வரிசைபோல் நின்று தடுத்துவிட்டது. அந்நிலை உண்டான உடனே, சோணாட்டுக் குதிரைப் படை விரைந்து களம் புகுந்தது. களம் புகுந்த குதிரைப் படை, ஊக்கமும் உரமும் மிகுந்து, ஊர்ந்து வரும் வீரர்களின் குறிப்பறிந்து விரைந்து சென்று, வேழங்களின் மத்தகத்தின் மீது, பாய்ந்து ஏறிற்று. அது எதிர்பாராது நிகழ்ந்துவிடவே, வேழங்கள் வெருண்டோடின.

நிலை கலங்காது நின்ற யானைகளின் அணிவகுப்பு மலை. வரிசைபோல் தோன்ற, உரமும் ஊக்கமும் கொண்டு விரைந்து பாய்ந்த குதிரைகள், மலைமீது விரைந்து ஏறும் வேங்கைப் புலிகள்போல் காட்சி அளித்தன. மலைமீது புலி பாயும் காட்சியை நினைவூட்டும் அந்நிகழ்ச்சி, மலை நாட்டானாகிய சேரனைப் புலிக்கொடியானாகிய சோழன் வெல்வான் என்பதை முன்னறிவிக்கும் நிமித்தமாம் போலும்!

“பரும இனமாக் கடவித் தெரி மறவர்
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும்புலி போன்ற, புனல்நாடன்
வேந்தரை அட்ட களத்து.” —களவழி: -15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/75&oldid=1360468" இலிருந்து மீள்விக்கப்பட்டது