பக்கம்:கழுமலப்போர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பெற்று மகிழ்ந்தனர். வன்னிலம் போலும் வளம் நல்கா நிலப் பகுதிகளில் வாழ்ந்தவர், வறுமையுற்று, வாழ்வின் வளம் பெறமாட்டாது வருந்தினர், வாழ்வும் வறுமையும், இவ்வாறு வாழும் நிலத்தின் வளம், வளமின்மைகளின் விளைவாகவே உண்டாயின, எனினும், அதை உணர்ந்து உள்ளம் அடங்கும் அத்துனை உயர்ந்த பண்பு மக்களுக்கு உண்டாகவில்லை, வள மார் வாழ்வில் விடப்பெற்றவர், அவ்வாழ்வு தம் முயற்சியினாலேயே வந்தது என எண்ணித் தருச்கினர்; தாழ் நிலையில் உள்ளாரைக் கண்டு எள்ளி நகைத்தனர். இல்லாமையால், இயல்பாகவே மாறாக, வறுமையில் உழன்று, வாழ்வின் பயன் இழந்து கிடந்த மக்கள், வளங் கொழிக்கும் நிலத்தாரின் செல்வ வாழ்வைக் காணுந்தோறும் சிந்தை நொந்தனர். அத்தகு பெருவாழ்வு தமக்கும் வேண்டும் என ஆசை கொண்டது அவர் உள்ளம். அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ள, அவர். எதற்கும் துணிந்து நின்றனர். ஆனால், அவ்வின்ப வாழ்வை அவர்க்கு அளிக்க மேனிலையில் வாழ்வார் முன்வந்திலர். அதனால் இருதிறத்தார்க்குமிடையே மன வேறுபாடு வளர்ந்தது. அது வளர்ந்து பகையாக மாறிற்று. இறுதியில் அது அவர்க்கிடையே போராய் உரு வெடுத்தது.

இவ்வாறு உருவெடுத்த போரை, அப்போர்க்காம் காரணம் கருதி நான்கு வகையாகப் பகுத்து விளக்கியுள்ளார், தமிழ் மக்களின் தலையாய ஒழுக்கங்களை வரையறுத்து விளக்கிய ஆசிரியர் தொல்காப்பியனார், அவை: வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை.

நிலம், ஆங்காங்குப் பெற்றிருக்கும் இயற்கை நிலைகளுக்கேற்ப, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாகப் பிரிக்கப் பெறும். மலையும் மலை சார்ந்த இடமும், குறிஞ்சி. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை, மலையென்றே காடு என்றோ துணிந்து கூறமாட்டாது சிறு மலையும், குறுங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/8&oldid=1355437" இலிருந்து மீள்விக்கப்பட்டது